மது, சூது, போதை இல்லாத வளமான இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம் - அன்புமணி ராமதாஸ்


மது, சூது, போதை இல்லாத வளமான இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம் - அன்புமணி ராமதாஸ்
x

போதை, மது, சூது ஆகியவை இல்லாத வளமான இந்தியாவை உருவாக்க இந்த விடுதலை நாளில் உறுதியேற்றுக் கொள்வோம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா அதன் 76-ஆவது விடுதலை நாளை கொண்டாடும் வேளையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு நாட்டு மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் வரம் என்பது விடுதலை என்பதை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? 400 ஆண்டுகளுக்கு மேல் ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியா 75 ஆண்டுகளுக்கு முன் அடிமைத்தளையிலிருந்து விடுபட்ட போது ஒட்டுமொத்த இந்திய மக்களும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. விடுதலை என்ற அந்த ஒற்றை வார்த்தையின் மூலமாகத் தான் ஆங்கிலேயர்களின் பொருளாதார, சமூக, கல்விச் சுரண்டல்களில் இருந்து நாம் தப்பித்து வந்தோம். அந்த வகையில் ஒவ்வொரு விடுதலை நாளும் பெருமகிழ்ச்சி அளிக்கும் நாள் தான் என்பதில் ஐயமில்லை.

ஆனால், அந்த மகிழ்ச்சியை அனுபவிக்கும் நிலையில் நாம் இல்லை என்பது தான் இந்த மகிழ்ச்சியான நாளில் வருத்தமான உண்மை. ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலையடைந்த நாம், இப்போது போதை, மது, சூது ஆகிய மூன்று அரக்கர்களிடம் சிக்கிக் கொண்டு தவிக்கிறோம். ஆங்கிலேயர்களை விட இந்த சமூகக் கேடுகள் நம்மை பல மடங்கு கூடுதலாக சுரண்டுகின்றன. ஆங்கிலேயர்களால் ஏற்பட்ட உயிர், பொருளாதார இழப்புகளை விட இந்த அரக்கர்களால் ஏற்படும் இழப்புகள் அதிகம். ஆங்கிலேயர்களிடம் இருந்து பெற்ற விடுதலையை போதை, மது, சூது ஆகிய அரக்கர்களிடம் நாம் இழந்து கொண்டிருக்கிறோம். மகிழ்ச்சியான மனித வாழ்க்கை இந்த சமூகக் கேடுகளால் நரகமாக மாறிக் கொண்டிருப்பதை உணர முடிகிறது.

சுதந்திரம் என்பது ஒற்றை வார்த்தை அல்ல. அமைதி, வளம், சமத்துவம், வாழ்வுரிமை, சமூகநீதி, கவுரமான வாழ்க்கை உள்ளிட்ட மனித உரிமைகளின் ஒட்டுமொத்த தொகுப்பு தான் விடுதலை ஆகும். இத்தகைய சிறப்புமிக்க விடுதலையை இந்த நாடும், நாட்டு மக்களும் முழுமையான அனுபவிக்க வேண்டும் என்றால், போதை, மது, சூது ஆகிய மூன்று சமூகக் கேடுகளும் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்; அவை இல்லாத வளமான இந்தியாவை உருவாக்க இந்த விடுதலை நாளில் அனைத்து மக்களும் உறுதியேற்றுக் கொள்வோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story