ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம், தமிழகம் இந்தியாவிற்கு வழிகாட்டட்டும் - கமல்ஹாசன் டுவீட்


ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம், தமிழகம் இந்தியாவிற்கு வழிகாட்டட்டும் - கமல்ஹாசன் டுவீட்
x

ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசியல் கட்சியினர் ஊர்வலமாக சென்று தீவிரமாக வாக்குகள் சேகரித்து வருகிறார்கள்.

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4-ந்தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு வருகிற 27-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர்.

தேர்தல் நாட்கள் நெருங்கி வரும் நிலையில், தேர்தலில் போட்டியிடும் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார்கள். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களை கட்டி உள்ளது. கிழக்கு தொகுதியில் எந்த வீதிகளில் சென்றாலும் அரசியல் கட்சியினர் ஊர்வலமாக சென்று தீவிரமாக வாக்குகள் சேகரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்குகள் சேகரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.

இது குறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

"நம் மீது கை வைக்க நினைப்பவர்கள் மீது நாமும் கை வைக்கவேண்டியதில்லை. கை சின்னத்தில் மை வைத்தால் போதும். ஈரோடு கிழக்கில் ஆர்ப்பரித்த மக்கள் வெள்ளமும் அதை ஆமோதித்தது. ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம். தமிழகம் இந்தியாவிற்கு வழிகாட்டட்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story