தாயாரின் தோழியை கொன்று நகையை கொள்ளையடித்த மீனவருக்கு ஆயுள் தண்டனை - சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


தாயாரின் தோழியை கொன்று நகையை கொள்ளையடித்த மீனவருக்கு ஆயுள் தண்டனை - சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x

தாயாரின் தோழியை கொன்று நகையை கொள்ளையடித்த மீனவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

சென்னை

சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் மைக்கேல் நாயகம். மீனவர். இவரது மனைவி அந்தோணி மேரி (வயது 65). அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு மீனவரான சகாய அலெக்சின் (42) தாயாரும், அந்தோணி மேரியும் தோழிகள். இதனால் அந்தோணி மேரி வீட்டுக்கு சகாய அலெக்ஸ் அடிக்கடி சென்று வந்தார். இந்தநிலையில் அந்தோணி மேரியை கொலை செய்து அவர் அணிந்திருக்கும் நகைகளை கொள்ளையடிக்க சகாய அலெக்ஸ் திட்டமிட்டார். கடந்த 28.7.2021 அன்று அந்தோணி மேரி வீட்டில் தனியாக இருந்ததை அறிந்த சகாய அலெக்ஸ் அங்கு சென்று துண்டால் அவரது கழுத்தை நெறித்து கொலை செய்தார்.

பின்னர் அவர் அணிந்திருந்த 6 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றார். இந்த கொலை, கொள்ளையில் தான் சிக்காமல் இருக்க அந்தோணி மேரியின் கண்களில் மிளகாய் பொடியை தூவி மர்மநபர்கள் நகையை கொள்ளையடித்து சென்றது போன்று காண்பிக்க வேண்டும் என்பதற்காக அந்தோணி மேரி மீது மிளகாய் பொடியை தூவி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

இதுகுறித்து காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு பின்பு சகாய அலெக்சை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் கோர்ட்டில் நீதிபதி டி.எச்.முகமது பாரூக் முன்னிலையில் நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, சகாய அலெக்ஸ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி அவருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story