'அஜித், விஜய் போல் ரசிகர்களும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்' - அண்ணாமலை
அஜித், விஜய் போலவே அவர்களது ரசிகர்களும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் துணிவு, வாரிசு திரைப்படங்கள் ரிலீசானது குறித்தும், ரசிகர்களிடையே சில இடங்களில் மோதல் ஏற்பட்டது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த போது அவர் கூறியதாவது;-
"நடிகர் அஜித்தின் உழைப்பு அசாத்தியமானது. சினிமா துறையில் எந்த பின்புலமும் இல்லாமல் ஒரு மனிதன் இவ்வளவு வளர்ந்திருப்பது சாதாரண செயல் அல்ல. சாமானிய மனிதர்களுக்கு அவர் மிகப்பெரிய எடுத்துக்காட்டு.
அதே போல் நடிகர் விஜய், தனது நடிப்பை தொடர்ந்து மெருகேற்றி வந்திருக்கிறார். இந்த வயதிலும் ரப்பர் போன்று நடனம் ஆடுகிறார். நேரம் கிடைக்கும் போது துணிவு, வாரிசு இரண்டு படங்களையும் நான் பார்ப்பேன். அரசியலை பொறுத்தவரை துணிவாக இருப்பேன், வாரிசு அரசியலை எதிர்ப்பேன்.
அதே சமயம் இரண்டு பேரின் ரசிகர்களும் சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது. விஜய்யும், அஜித்தும் எவ்வளவு கண்ணியமாக நடந்து கொள்கிறார்கள். அவர்களைப் போலவே அவர்களது ரசிகர்களும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஒரு சகோதரனாக உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்."
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.