உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கடலூரில் கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பேரூராட்சிகளில் தூய்மை பணி உள்ளிட்ட அடிப்படை பணிகளை அவுட்சோர்சிங் முறையில் நிறைவேற்ற வெளியிடப்பட்ட அரசாணை 139-யை திரும்ப பெற வேண்டும். தனியார் மய கொள்கைகளை கைவிட வேண்டும்.தூய்மை பணி செய்து வரும் அனைத்து தொழிலாளர்களுக்கும் 34 சதவீத பஞ்சப்படியை சேர்த்து வழங்க வேண்டும்.
தினக்கூலி, மகளிர் சுயஉதவிக்குழுவினர்களுக்கு அரசாணை அடிப்படையில் குறைந்தபட்சம் ரூ.750 வீதம் நாள் ஒன்றுக்கு வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் துப்புரவு பணியாளர்களுக்கு 7-வது ஊதியக்குழு 62 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும்.
ஆர்ப்பாட்டம்
தூய்மை காவலர்களுக்கு மாத சம்பளம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை ஊழியர் சம்மேளனம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தூய்மை பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் உள்ளிட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் திரண்டு வந்தனர். தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கலெக்டரிடம் மனு
இதற்கு மாவட்ட துணை தலைவர் சீனுவாசன் தலைமை தாங்கினார். உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் கருப்பையன், மாவட்ட செயலாளர் பழனிவேல், மாவட்ட துணை தலைவர்கள் பாஸ்கரன், சுப்புராயன், ஆளவந்தார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இதில் பேரூராட்சி, ஊராட்சிகளில் பணியாற்றி வரும் நிரந்தர தொழிலாளர்கள், ஒப்பந்த தினக்கூலி, மகளிர் சுயஉதவிக்குழுவினர், துப்புரவு, தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அவர்கள் கோரிக்கை களை வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து அவர்கள் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியத்தை சந்தித்து மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.