நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்- திருச்சி


நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்- திருச்சி
x
தினத்தந்தி 30 March 2024 7:30 AM GMT (Updated: 30 March 2024 7:30 AM GMT)

நாடு சுதந்திரமடைந்த 1947-ம் ஆண்டுக்கு பிறகு திருச்சிராப்பள்ளி என பெயர் மாற்றப்பட்டது. தமிழகத்தின் மிகப்பழமையான நாடாளுமன்ற தொகுதி என்ற சிறப்பும் இந்த தொகுதிக்கு உண்டு

லைக்கோட்டை நகரமான திருச்சி, தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. அரசியல் கட்சிகளுக்கு திருச்சி என்றாவே திருப்பு முனைதான். எனவேதான் முக்கிய அரசியல் கட்சிகள், திருச்சியில் இருந்தே பிரசாரத்தை தொடங்குவதையும், முக்கிய முடிவுகளை எடுப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளன.

பாய்ந்தோடும் காவிரி ஆறு, தமிழகத்தின் இரண்டாம் தலைநகரம் என்பன போன்ற பல்வேறு சிறப்புகள் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உள்ளன. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் திருச்சினாப்பள்ளி என்றே அழைக்கப்பட்டது. நாடு சுதந்திரமடைந்த 1947-ம் ஆண்டுக்கு பிறகு திருச்சிராப்பள்ளி என பெயர் மாற்றப்பட்டது. தமிழகத்தின் மிகப்பழமையான நாடாளுமன்ற தொகுதி என்ற சிறப்பும் இந்த தொகுதிக்கு உண்டு. நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் நடைபெற்ற முதல் நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை உறுப்பினர் தேர்தல் முறை அமலில் இருந்த காலத்திலேயே தொடங்குகிறது.

இந்த தொகுதியானது 1951, 1953, 1955, 1956, 1961, 1967, 1976-ம் ஆண்டுகளில் 7 முறை ஏற்கனவே மறுசீரமைக்கப்பட்டது. 1976-ம் ஆண்டு முதல் முசிறி, லால்குடி, ஸ்ரீரங்கம், திருச்சி-1, திருச்சி-2, திருவெறும்பூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியிருந்தது. 2009-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து கந்தர்வகோட்டை (தனி), புதுக்கோட்டை ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளையும், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் என்ற திருச்சி மாவட்டத்தின் 4 சட்டமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்து வருகிறது.

விவசாயம்

டெல்டா பகுதிகளில் ஒன்றான திருச்சி தொகுதியில் பிரதான தொழிலாக விவசாயம் திகழ்கிறது. நெல், வாழை உள்ளிட்டவை விவசாயம் செய்யப்படுகிறது. இந்திய அளவில் பொதுத்துறை நிறுவனங்களில் நவரத்னா அந்தஸ்து பெற்ற பெல் எனப்படும் பாய்லர் ஆலை, துப்பாக்கி தொழிற்சாலைகள், பொன்மலை ரெயில்வே பணிமனை உள்பட மத்திய அரசின் தொழிற்சாலைகளும், தனியார் நிறுவனங்களும் பல அமைந்துள்ளன. தொழிற்சாலைகளை சார்ந்த சிறு, குறு நிறுவனங்களால் தொழிலாளர்கள் அதிகமுள்ள தொகுதியாகும். திருச்சியில் சர்வதேச விமானநிலையம் அமைந்துள்ளது. தற்போது இங்கு புதிதாக முனையம் திறக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முத்தரையர், கள்ளர், வெள்ளாளர், முக்குலத்தோர், ஆதிதிராவிடர் சமூகத்தினரும், நாயுடு, செட்டியார், நாடார், யாதவர், ரெட்டியார், வன்னியர் உள்ளிட்ட சமூகத்தினரும் உள்ளனர்.

பெரும்பான்மையான இந்துக்கள் உள்ளதை போல கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் கணிசமாக உள்ளனர். பல தரப்பட்ட மக்களை கொண்டது திருச்சி நாடாளுமன்ற தொகுதி. அதனால் திருச்சி தொகுதியை குறிப்பிட்ட சமூகத்தின் வட்டாரத்திற்குள் அடக்கிவிட முடியாது. இதனை கடந்த கால வரலாற்றிலே அறிந்து கொள்ள முடியும்.

கடந்த கால வரலாறு

முதுபெரும் கம்யூனிஸ்டு தலைவர்களான ஆனந்தநம்பியார், எம்.கல்யாணசுந்தரம், மத்திய மந்திரி ெரங்கராஜன் குமாரமங்கலம் ஆகியோரை தந்த தொகுதி. 1984-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எல்.அடைக்கலராஜ் தொடர்ந்து 4 முறை எம்.பி.யாக வெற்றி பெற்றுவந்தார். பிரதான கட்சிகள் பெரும்பாலும் கூட்டணி கட்சிகளுக்கே இந்த தொகுதியை ஒதுக்கி வந்த நிலையில், கடந்த 2009-ம் ஆண்டு மற்றும் 2014-ம் ஆண்டுகளில் அ.தி.மு.க. வசம் வந்தது. அ.தி.மு.க.வை சேர்ந்த ப.குமார், இருமுறையும் வெற்றி பெற்றார். 17 முறை பொதுத்தேர்தலையும், ஒருமுறை (2001-ஆண்டு) இடைத்தேர்தலையும் சந்தித்துள்ளது. இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் தலித் எழில்மலை நிறுத்தப்பட்டு, வெற்றி பெற்றார்.

1951-ம் ஆண்டு சுயேச்சை வேட்பாளர் இ.மதுரம் வெற்றி பெற்றார். இதன் தொடர்ச்சியாக இந்திய கம்யூனிஸ்டு 3 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒரு முறையும், காங்கிரஸ் 5 முறையும், த.மா.கா. ஒரு முறையும், அ.தி.மு.க. இருமுறை வெற்றி பெற்றுள்ளன. பா.ஜ.க.வும் இருமுறை வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க., ம.தி.மு.க. ஆகியவை தலா ஒரு முறை வென்றுள்ளன. கடைசியாக 2019-ம் ஆண்டு தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட சு.திருநாவுக்கரசர் வெற்றி பெற்றார்.

களம் காணும் வேட்பாளர்கள்

இந்த நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்த கருப்பையா, பா.ஜனதா கட்சி கூட்டணியில் அ.ம.மு.க. சார்பில் அக்கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், திருச்சி மாநகராட்சி 47-வது வார்டு முன்னாள் கவுன்சிலருமான ப.செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதனால் திருச்சியில் 4 முனை போட்டி நிலவுகிறது. மேலும் பிரதான கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் புதுமுகங்களாக களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.

தீர்க்கப்படாத பிரச்சினைகள்

திருச்சி தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்தாலும், பல தீர்க்கப்படாத பிரச்சினைகளும் உள்ளன. பாய்லர் ஆலையை சார்ந்து உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் ஏராளமான சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் இயங்கி வந்ததால் திருவெறும்பூர், துவாக்குடி, அரியமங்கலம் போன்ற பகுதிகளில் இளைஞர்கள் ஏராளமானோர் வேலை வாய்ப்பு பெற்றனர். பாய்லர் ஆலைக்கு ஆர்டர்கள் வருகை குறைந்ததால் ஏற்பட்ட திடீர் பின்னடைவால் அதனை நம்பி இருந்த பல குறு, சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால் அவற்றில் வேலை செய்த தொழிலாளர்கள் வேலை இழந்து வாழ வழியின்றி தவித்து வருகிறார்கள். அரியமங்கலம் பழைய பால்பண்ணை ரவுண்டானா முதல் துவாக்குடி வரை 14 கிலோ மீட்டர் நீளத்திற்கு அணுகு சாலை அமைக்கும் திட்டம் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருப்பது, ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் அடிமனை பிரச்சினைக்கு தீர்வு, வேளாண் சார்ந்த மதிப்பு கூட்டுத்தொழில்கள் தொடங்குதல், எக்ஸ்பிரஸ் சாலை, திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு நேரடி ரெயில் சேவை போன்ற நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.

முந்திரி தொழில்

புதுக்கோட்டையை பொறுத்தவரை இங்கிருந்து ரெயில் சேவையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை உள்ளது. குறிப்பாக புதுக்கோட்டை-தஞ்சாவூர் ரெயில் பாதை திட்டம், மதுரைக்கு ரெயில் சேவை நிறைவேற்ற கோரி நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். விவசாயிகளிடம் முந்திரியை அரசு கொள்முதல் செய்ய வேண்டும். வெளிநாட்டு ஏற்றுமதியை ஊக்குவிக்க வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாக உள்ளது. பின்தங்கிய மாவட்டமாக திகழும் புதுக்கோட்டையில் பல திட்டங்களை கொண்டு வந்து, வளா்ச்சியடைந்த மாவட்டமாக மாற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

2019-ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி?

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சு.திருநாவுக்கரசர் வெற்றி பெற்றார். மொத்தம் 24 வேட்பாளர்கள் களம் இறங்கினர். இதில் முதல் 5 இடங்களை பிடித்த வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-

சு.திருநாவுக்கரசர் (காங்கிரஸ்) - 6,21,285

இளங்கோவன் (தே.மு.தி.க.) - 1,61,999

சாருபாலா தொண்டைமான் (அ.ம.மு.க.) - 1,00,818

வினோத் (நாம் தமிழர்) - 65,286

ஆனந்தராஜா (மக்கள் நீதி மய்யம்) - 42,134

(இந்த தேர்தலில் நோட்டாவுக்கு மட்டும் 14,437 வாக்குகள் அளிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது).

வெற்றி யார் கையில்?

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், புதுக்கோட்டை ஆகிய 5 தொகுதிகள் தி.மு.க. வசமும், கந்தர்வகோட்டை (தனி) தி.மு.க. கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வசமும் உள்ளன. தமிழகத்தில் நாடாளுமன்ற தொகுதிகளில் முக்கியமானதில் திருச்சியும் ஒன்றாகும். கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு திருநாவுக்கரசர் எம்.பி.யான நிலையில், இந்த தேர்தலில் திருச்சி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்படாமல் கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திருநாவுக்கரசருக்கும் வேறு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டதில் வைகோவின் மகன் களத்தில் இறக்கப்பட்டதால் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

ம.தி.மு.க.வை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தி.மு.க.வினர் வலியுறுத்தியதை, பம்பரம் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என துரைவைகோ கண்ணீர் மல்க உருக்கமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே பம்பரம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்க மறுத்த நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையை ம.தி.மு.க.வினர் தொடங்கியுள்ளனர். அரசியலில் முதுபெரும் தலைவரான வைகோவின் மகனான துரை வைகோவை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று அக்கட்சியினரிடையே ஆர்வம் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்த அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையாவுக்கு, மாவட்டத்திற்குள் இரு சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றிருப்பதும், மற்ற தொகுதிகளில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் பலம், அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் அடையாளத்தோடு களம் காணுகிறார். இவர் தேர்தல் களத்திற்கு புதியவர் என்றாலும் கட்சியிலும், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை தொகுதியில் மக்கள் மத்தியில் இவருக்கு தனிப்பெயர் உண்டு. மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர். பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். அ.தி.மு.க.வினர் மீண்டும் திருச்சி தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர். இதேபோல, அ.ம.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி என்ற அடையாளத்தோடும், டி.டி.வி.தினகரனின் ஆதரவாலும் களம் காண்கிறார். மத்தியில் ஆளும் பா.ஜனதா கூட்டணி கட்சியின் சார்பில் போட்டியிடுவதால் பா.ஜனதாவினரும், கூட்டணி கட்சியினரும் களப்பணியாற்றுகின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் ராஜேஷ், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்ட காலத்தில் போராட்டத்தை முன்னெடுத்தவர். அந்த அடையாளத்தோடும், சீமானின் பிரசார பலத்தை நம்பியும் களத்தில் குதித்துள்ளார். போட்டியிடும் அனைவருமே மக்களுக்காக கோரிக்கைகளை நிறைவேற்றுவேன். நாடாளுமன்றத்தில் மக்களின் குரலாக ஒலிப்பேன் என பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி தொகுதியில் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கையை விட தற்போது 35,779 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். குறிப்பாக இவர்கள் முதல் தலைமுறை வாக்காளர்கள். இதனால் இவர்களது வாக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. எது எப்படியோ? திருச்சி தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு யாரை அனுப்பி வைக்க உள்ளனர் என்பதும், மலைக்கோட்டையில் யாருடைய கொடி பறக்கப்போகிறது என்பது ஜூன் மாதம் 4-ந் தேதி தெரிந்துவிடும். இதனை ஆவலோடு அனைத்துக்கட்சிகளுமே காத்திருக்கின்றன.

வாக்காளர்கள் எவ்வளவு?

கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்படி, திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் 15 லட்சத்து 44 ஆயிரத்து 742 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 52 ஆயிரத்து 953 பேர், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 91 ஆயிரத்து 548 பேர், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 241 பேர் ஆவர்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அடங்கிய சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:-

ஸ்ரீரங்கம் - 3,04,908

திருச்சி மேற்கு - 2,71,657

திருச்சி கிழக்கு - 2,53,600

திருவெறும்பூர் - 2,67,997

கந்தர்வகோட்டை (தனி) - 2,01,771

புதுக்கோட்டை - 2,44,809


Next Story