பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மேல் முறையீட்டு மனு: எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மேல் முறையீட்டு மனு: எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x

மான நஷ்டஈடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் வாக்குமூலத்தை பதிய வழக்கறிஞர் ஆணையர் நியமித்ததை எதிர்த்து பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

சென்னை,

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019-ம் ஆண்டு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக, வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்துக்கு சென்னை ஐகோர்ட்டு அனுப்பிவைத்தது.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது. தமது வீட்டில் சாட்சியத்தை பதிவுசெய்ய வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமிக்க வேண்டும். தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள தனக்கு பாதுகாப்பு வழிமுறைகள் காரணமாக, ஐகோர்ட்டு வளாகத்துக்கு வரும்போது, மற்ற வழக்காடிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். இந்த சிக்கல்களை தவிர்ப்பதற்காகவே வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமிக்க வேண்டும்.

மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராவதை வேண்டுமென்றே தவிர்க்கவில்லை. அனைத்து சட்ட நடைமுறைகளையும் பின்பற்ற தயாராக இருக்கிறேன். வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டுமென்ற இந்த மனுவை ஏற்காவிட்டால், அது தனக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்ததோடு, இந்த நடைமுறையை அவரது வீட்டில் இருந்தே மேற்கொள்வதற்காக வழக்கறிஞர் ஆணையராக எஸ்.கார்த்திகை பாலனை நியமித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, "உடல் நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களுக்குத்தான் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க முடியும். மேலும், மத்திய தொழிலக பாதுகாப்பின் கீழ் சென்னை ஐகோர்ட்டு வருவதால் எதிர்க்கட்சி தலைவருக்கான பாதுகாப்பு நடைமுறையை காரணமாக கூற முடியாது" என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சாட்சியம் பதிவு செய்யப்பட்டுவிட்டதா? என கேள்வி எழுப்பினர். இன்னும் தொடங்கவில்லை, என எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் விளக்கம் அளித்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story