மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடக்கம்


மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடக்கம்
x

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முதல்கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன.

மதுரை,

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2015-ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.

தற்போது வரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் விசாலமான சாலை மற்றும் சுற்றுச்சுவரை தவிர வேறு கட்டுமானப் பணிகள் எதுவும் தொடங்கவில்லை. இதனால், எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் பேசுபொருளாக மாறியது. இதையடுத்து மதுரை தோப்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு மத்திய அரசு டெண்டர் கோரியது. இந்த டெண்டரை எல் அண்ட் டி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில் அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கான வாஸ்து பூஜை மற்றும் சமன்படுத்தும் வேலை நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முதல்கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன.

முதற்கட்டமாக ரூ.10 கோடி மதிப்பீட்டில், 5 கி.மீ. சுற்றளவுக்கு 12 அடி உயர சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள பகுதியில் ரூ.21 கோடியில், 6 கிலோ மீட்டருக்கு சாலை பணிகள் நிறைவடைந்துள்ளது. மருத்துவமனை கட்டுமானப் பணிகளை எல் அண்ட் டி நிறுவனம் தொடங்கியுள்ளதாக எய்ம்ஸ் நிர்வாகம் தகவல் தெரிவித்து உள்ளது. ரூ.1,977 கோடியில் 10 தளங்களுடன் 870 படுக்கை வசதிகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுகிறது.



Next Story