பெற்றோரை பராமரிக்காததால் மகனுக்கு தானமாக வழங்கிய சொத்து பதிவை 8 வாரத்தில் ரத்து செய்ய வேண்டும்- கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


பெற்றோரை பராமரிக்காததால்  மகனுக்கு தானமாக வழங்கிய சொத்து பதிவை 8 வாரத்தில் ரத்து செய்ய வேண்டும்- கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

பெற்றோரை பராமரிக்காததால் மகனுக்கு தானமாக எழுதி கொடுத்த சொத்து பதிவை 8 வாரத்தில் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாவட்ட கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


பெற்றோரை பராமரிக்கவில்லை

மதுரை திருமங்கலம் டவுன் பகுதியை சேர்ந்த ரவணப்பசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எனக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர். கடந்த 2012-ம் ஆண்டில் டி.குன்னத்தூரில் உள்ள எங்கள் பூர்வீக சொத்துகளை நானும், எனது மனைவியும் சேர்ந்து என் மகன் வெங்கிடசாமிக்கு தானமாக எழுதிக்கொடுத்தோம். எங்களை நல்லமுறையில் கவனித்துக்கொள்வதாக என் மகன், உறுதி அளித்து இருந்தார்.ஆனால் அவரது உறுதிமொழியின்படி எங்களை கவனிக்க தவறிவிட்டார். எங்களுக்கு 10 ஆண்டுகளாக சிறு உதவி கூட செய்யவில்லை. கடந்த ஆண்டு என் மனைவி இறந்து விட்டார். அவருக்கு இறுதிச்சடங்குகள் செய்வதற்கு கூட என் மகன் வரவில்லை. இந்தநிலையில் எங்கள் பூர்வீக சொத்துகளை வீட்டுமனைகளாக மாற்றி தற்போது அவர் விற்பனை செய்கிறார். இதுசம்பந்தமாக உசிலம்பட்டி தாசில்தாரிடம் புகார் அளித்தேன்.

சொத்து பதிவு ரத்து

இதையடுத்து எனக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரமும், 2 பிளாட்டுகளும் தருவதாக கூறி புகாரை வாபஸ் பெறச்செய்தார். அதன்பின்னும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. எனவே எங்கள் பூர்வீக சொத்துகளை வெங்கிடசாமிக்கு தானமாக வழங்கியதை ரத்து செய்யும்படி மாவட்ட கலெக்டருக்கு மனு அளித்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனது மனுவின் அடிப்படையில் தான செட்டில்மென்டை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல்கள் திருமங்கலம் சுந்தர், முத்துமாரி ஆகியோர் ஆஜராகி, சொத்துகளை தானமாக பெற்றுக்கொண்டு பெற்றோரை பராமரிக்காத மகனின் சொத்து பதிவை முதியோர் பராமரிப்பு சட்டத்தின்கீழ் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என வாதாடினார்.

கலெக்டருக்கு உத்தரவு

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரரின் மனுவை மதுரை மாவட்ட கலெக்டர் பரிசீலித்து 8 வாரத்தில் சொத்து பதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.


Next Story