கும்மிடிப்பூண்டி அருகே கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது


கும்மிடிப்பூண்டி அருகே கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
x

கும்மிடிப்பூண்டி அருகே கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தின் பேட்டரி திருட்டு வழக்கில் கடந்த 11-ந்தேதி திருப்பாலைவனத்தை சேர்ந்த கெல்லீஸ் என்ற விஜி (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சின்ன ஒபுளாபுரம் கிராமத்தில் உள்ள தனியார் பிளைவுட் தொழிற்சாலையின் பின்புற மதில் சுவரையொட்டி சுமார் 35 வயது கொண்ட ஆண் ஒருவரின் கழுத்தை அறுத்து திட்டமிட்டு கொலை செய்து வீசியது தெரியவந்தது. தன்னிடம் வழிப்பறியில் ஈடுபட்ட அந்த நபரை கொலை செய்ததாக விஜி அப்போது போலீசாரிடம் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து மேற்கண்ட இடத்தில் இருந்து அழுகிய நிலையில் எலும்பு கூடான ஆண் உடலை கண்டெடுத்த போலீசார், பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பேட்டரி திருட்டு வழக்கில் விஜியை அன்றைய தினமே கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

இந்த நிலையில் விஜியின் பேச்சில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது? என்பதை கண்டறிய அவரது நெருங்கிய நண்பர்கள் சிலரை பிடித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், விஜியுடன், நாகராஜகண்டிகையை சேர்ந்த பழைய குற்றவாளியான பூச்சி என்கிற லெவின் (22) என்கிற நபரும் சேர்ந்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

விசாரணையின் அடுத்த கட்டத்தில் கொலை செய்யப்பட்ட நபர் ஓடிசாவை சேர்ந்த அஜித் குமார் (35) என்பதும் அவரும் பழைய குற்றவாளி தான் என்பது தெரியவந்தது. லெவினுக்கு காதலியான ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற அஜித் குமாரை லெவினும், விஜியும் மது வாங்கி கொடுத்து திட்டமிட்டு கொலை செய்ததாக நண்பர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து தலைமறைவாக இருந்து வந்த லெவினை நேற்று கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் கைது செய்தனர். அப்போது தனது காதலியிடம் தவறாக நடக்க முயன்ற அஜித்குமாரை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று மது வாங்கி கொடுத்து போதையில் பாட்டிலால் தலை மற்றும் முகத்தில் தாக்கி கழுத்தை கத்தியால் அறுத்து விஜியுடன் சேர்த்து கொலை செய்ததாக போலீசாரிடம் லெவின் வாக்குமூலம் கொடுத்ததாக தெரிகிறது.

பேட்டரி திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள விஜியையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்ற பின்னர் அவரையும் போலீசார் இந்த கொலை வழக்கில் சேர்த்திட உள்ளனர்.


Next Story