பராமரிப்பு இல்லாத பசுமை பூங்கா ஏரி


பராமரிப்பு இல்லாத பசுமை பூங்கா ஏரி
x

ஆவடி பருத்திப்பட்டு பசுமை பூங்கா ஏரி பராமரிக்கப்படாமல் கிடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சென்னை

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பருத்திப்பட்டு பகுதியில் 87.06 ஏக்கர் பரப்பளவில் பருத்திப்பட்டு ஏரி அமைந்துள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி, சுற்றுவட்டார பகுதிகளின் முக்கிய நீர் ஆதாரமாக திகழ்ந்து வருகிறது. ஏரியை சுற்றி ஜே.பி.எஸ்டேட், மூர்த்தி நகர், பெரியார் நகர், வசந்தம் நகர், காமராஜர் நகர், ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாக்கடை கால்வாய் வழியாக பருத்திப்பட்டு ஏரியில் கலக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏரி மாசடைந்து வந்தது. ஏரியை புனரமைத்து மீட்டெடுப்பதற்காக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை சார்பில் ரூ.28.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த தொகையில் ஏரியை சுற்றி சுமார் 3 கி.மீ. தூரத்துக்கு நடைபாதை, ஏரியின் நடுவில் பறவைகள் வந்து தங்கி இளைப்பாற பசுமை அடர்காடு மற்றும் பசுமை பூங்கா, சிறுவர்கள் விளையாட பூங்கா போன்றவை அமைக்கப்பட்டது.

சென்னையில் சேத்துப்பட்டு ஏரிக்கு அடுத்து ஆவடியில் உள்ள பருத்திப்பட்டு ஏரிதான், படகு சவாரியுடன் கூடிய பசுமை பூங்கா ஏரியாக உள்ளது. ஏரியில் படகு சவாரியும் தொடங்கப்பட்டது. ஏரி மேம்படுத்தப்பட்ட பிறகு அப்பகுதி பொதுமக்களின் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்தது.

ஆனால் ஏரியில் சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுக்க ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தினமும் பல ஆயிரம் லிட்டர் கழிவுநீர் பருத்திப்பட்டு ஏரியில் நேரடியாகவே கலக்கப்பட்டு வருகிறது. ஏரியின் அருகே 4 கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு தொட்டியில் ஒரு நாளைக்கு 9 லட்சம் லிட்டர் வீதம் 4 தொட்டிகளிலும் சேர்த்து 36 எம்.எல்.டி. தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. ஆனால் அவை முறையாக செயல்படுத்தப்படாததால் மழைநீர் வடிகால்வாயில் கழிவுநீர் கலந்து நேரடியாக ஏரியில் வந்து கலந்து விடுகிறது.

இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த ஏரியில் ஆயிரக்கணக்கான பெரிய மற்றும் சிறிய வகை மீன்கள் செத்து மிதந்தன. மாநகராட்சி அதிகாரிகள் சிறிய மிதவை மூலம் இறந்து கிடந்த ஆயிரக்கணக்கான மீன்களை அகற்றினர்.

ஆவடி மாநகராட்சி சார்பில் ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் சுற்றுச்சூழல் துறை நிதி ஒதுக்கீடு செய்து, அந்த நிதியில் பொதுப்பணி துறை பசுமை பூங்காவை உருவாக்கி ஆவடி மாநகராட்சிக்கு வருவாய் ஏற்படுத்தும் நோக்கில் ஒப்படைத்தது. பசுமை பூங்காவினுள் சுமார் ஆயிரம் பேர் வரை பங்கேற்கும் அளவுக்கு திறந்தவெளி ஆடிட்டோரியம் உள்ளது. இந்த இடத்தில் பல்வேறு அரசியல் மற்றும் தனியார் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதித்து அதன் மூலம் வருவாயை பெருக்கலாம்.

பல்வேறு இசை நிகழ்ச்சிகள், அரசு சார்பான பொருட்காட்சி, கண்காட்சிகள், தன்னார்வ கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தி அதன் மூலமும் வருவாயை பெருக்கலாம்.

பொதுமக்கள் வீடுகளில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளையும் திறந்தவெளி ஆடிட்டோரியத்தில் நடத்த அனுமதித்து குறைந்த கட்டணத்தை வசூலித்து அதன் மூலமும் வருவாயை பெருக்க முடியும். படகு சவாரி, படகு பயிற்சி கொடுக்கும் இடமாகவும் மாற்றலாம். ஆனால் ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் இந்த ஏரி மூலம் வருவாயை பெருக்க நினைக்காமலும், ஏரியை பராமரிக்காமலும் விட்டதால் ஆவடி மாநகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பசுமை பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவில் போதிய பராமரிப்பு இல்லாததால் சிறுவர்கள் விளையாடக்கூடிய அனைத்து உபகரணங்களும் உடைந்து கிடக்கின்றன. சிறுவர்கள் விளையாடும் இடங்களின் கீழ் பள்ளமாக இருப்பதால் அதில் மழைநீர் தேங்கி குட்டைபோல் காட்சி அளிக்கிறது.

ஏரியின் சுற்றுப்புற பகுதிகளில் போதிய பராமரிப்பு இல்லாததால் புதர் மண்டி கிடக்கிறது. பூங்காவை சுற்றிலும் நடைபாதை ஓரங்களிலும் புதர் மண்டி கிடப்பதால் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் நடைபயிற்சி செல்வோர் மற்றும் ஏரிக்கும் வரும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பசுமை பூங்கா ஏரி தொடங்கிய புதிதில் பொதுமக்கள் வருகை அதிகமாக காணப்பட்டது. ஆனால் போதிய பராமரிப்பு இல்லாததால் தற்போது பொதுமக்கள் வரத்து குறைந்து காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து அங்கு நடைபயிற்சிக்கு வருபவர்கள் கூறும்போது, "இந்த ஏரியில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கழிவுநீர் நேரடியாக கலக்கப்பட்டு வருவதால் தண்ணீர் கருமை நிறமாக மாறி உள்ளது. ஏரி நீரும் மாசடைகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பூங்காவையும் சீரமைத்து பராமரிக்க வேண்டும்.

புதர்களை அகற்றி பாம்புகள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும். சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களையும் புதுப்பிக்க வேண்டும்" என்றனர்.


Next Story