ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளையடித்தவர் பெங்களூருவில் கைது
சென்னையில் ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் வீட்டில் 40 பவுன் நகைகளை கொள்ளையடித்தவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 70). இவருடைய மனைவி பத்மாவதி (62). ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர். இந்த வயதான தம்பதியர் வீட்டில் கடந்த 17-ந்தேதி அன்று 40 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது.
வீட்டில் பிளம்பர் வேலை பார்க்க வந்ததாக கூறி இந்த துணிகர கொள்ளை அரங்கேறியது. இந்த சம்பவம் குறித்து அசோக் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் பத்மாவதி வீட்டில் 40 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது வில்லிவாக்கத்தை சேர்ந்த பிரபல கொள்ளையன் ஜோதிமணி (57) என்பது தெரிய வந்தது.
ஜோதிமணியை கைது செய்ய அவரது வீட்டுக்கு தனிப்படை போலீசார் சென்றனர். அப்போது அவர் பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று பதுங்கியது தெரிய வந்தது.
தனிப்படை போலீசார் விமானம் மூலம் பெங்களூரு சென்றனர். அங்கு அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 16 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். மீதமுள்ள நகைகளை அவர் விற்பனை செய்திருப்பது தெரிய வந்தது.
கொள்ளையடிக்க போகும் வீடுகளை பல முறை நோட்டமிடுவதும், பின்னர் யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக சைக்கிளில் சென்று திருடுவதும் ஜோதிமணிக்கு கை வந்த கலை ஆகும்.
இவர், கொள்ளையடிப்பதை காட்டிலும், அந்த பொருட்களை உடனடியாக விற்பனை செய்வதில் கில்லாடி ஆவார். இவர் கொள்ளையடிக்கும் பொருட்களை மீட்பது போலீசாருக்கு சவாலான காரியம் ஆகும். ஆனால் இந்த வழக்கில் 16 பவுன் நகைகளை போலீசார் உடனடியாக கைப்பற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.