மங்களூரு ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த விவகாரம் எதிரொலி - சென்னையில் போலீசார் தீவிர வாகன சோதனை


மங்களூரு ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த விவகாரம் எதிரொலி - சென்னையில் போலீசார் தீவிர வாகன சோதனை
x
தினத்தந்தி 20 Nov 2022 11:20 AM GMT (Updated: 20 Nov 2022 2:21 PM GMT)

தமிழகம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகள் மற்றும் தமிழ்நாடு-கர்நாடகா எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை,

கர்நாடக மாநிலம் நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று வெடித்தது. சிறிது நேரத்தில் ஆட்டோவிலும் தீப்பிடித்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவரும், ஒரு பயணியும் பலத்த காயம் அடைந்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மூத்த போலீஸ் அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது ஆட்டோவில் இருந்து குக்கர் ஒன்று கைப்பற்றப்பட்டது. இதனால் குக்கர் வெடித்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

ஆட்டோவில் வெடிப்பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்ட போது வெடி விபத்து ஏற்பட்டதா அல்லது குக்கர் வெடித்ததால் தீப்பிடித்ததா என்பது உறுதியாக தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகள் மற்றும் தமிழ்நாடு-கர்நாடகா எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை மாநகரம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

குறிப்பாக சென்னை காமராஜர் சாலை, ராயப்பேட்டை, கிண்டி, ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், அண்ணா சதுக்கம், நுங்கம்பாக்கம், அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை போலீசார் தீவிரமாக சோதனையிட்டனர்.


Next Story