பிரதமர் மோடியின் 100-வது 'மனதின் குரல்' நிகழ்ச்சி: தமிழகம் முழுவதும் மக்கள் கேட்டு ரசிக்க ஏற்பாடு


பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி: தமிழகம் முழுவதும் மக்கள் கேட்டு ரசிக்க ஏற்பாடு
x

பிரதமர் நரேந்திரமோடியின் 100-வது ‘மனதின் குரல்' நிகழ்ச்சியை, தமிழகம் முழுவதும் மக்கள் கேட்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

'மனதின் குரல்' நிகழ்ச்சி

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒவ்வொரு மாதத்தின் 4-வது ஞாயிற்றுக்கிழமையும், 'எனது அருமை நாட்டு மக்களே' என்று பிரதமர் நரேந்திர மோடி தன் உரையை தொடங்கும், 'மனதின் குரல்' நிகழ்ச்சி 23 கோடி மக்களால் ரசிக்கப்படுகிறது.காணொலி தொடர்புகள் கண்ணிமைக்கும் நேரத்தில் கிடைக்கும் இக்காலக் கட்டத்தில், வானொலி மூலம் மக்களை வசீகரித்து, வாகை சூடிய பிரதமர் நரேந்திர மோடியின் 100-வது 'மன் கி பாத்' நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது. 100-வது முறையாக 'மனதின் குரல்' ஆக தமிழில் மலர இருக்கிறது.

100-வது நிகழ்ச்சி

ஒரே நேரத்தில், நாடு முழுவதும் பல கோடி மக்களால் கேட்கப்படும் இந்த நிகழ்ச்சியை, தமிழக பா.ஜ.க. சார்பில் ஒவ்வொரு மாவட்டந்தோறும், ஒவ்வொரு மண்டலம் தோறும், கிளை அளவில் அனைவரும் கேட்கும் வகையில், மக்களின் மனம் கவர்ந்த 'மன் கி பாத்' நிகழ்ச்சியின் ஒலி, ஒளிபரப்புகள், பா.ஜ.க.வின் நிர்வாகிகளால் விரிவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

இதுவரை உலகில் எந்த பிரதமரும், எந்த நாட்டின் தலைவரும், வானொலியின் வாயிலாக மக்களை சந்தித்ததில்லை. இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்க அதிபர் 13 முறை வானொலியில் பேசியதே, இதுவரை சாதனையாக கருதப்பட்டது. புதிய சாதனையாக 99 முறை மக்களிடம் வானொலியில் உரையாற்றிய பிரதமர் 100-வது முறையாக 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் உரையாற்ற இருக்கிறார். இதில் நாட்டு மக்களுக்கு விடுக்க இருக்கும் செய்தியை கேட்பதற்காக, நானும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story