கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு


கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு
x

21 மசோதாக்களை கிடப்பில் போட்டு, அரசின் செயல்பாடுகளுக்கு கவர்னர் முட்டுக்கட்டை கொடுத்து வருவதாக கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்தியாவின் 74-வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் ஜனாதிபதியும், மாநிலங்களில் கவர்னரும் கொடியேற்றுவர். தமிழ்நாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்ற உள்ளார்.

இதையடுத்து நாளை கவர்னர் மாளிகையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தேநீர் விருந்து நடைபெற உள்ளது. இந்த விருந்தில் பங்கேற்க அனைத்து கட்சியினருக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"குடியரசு தினத்தையொட்டி தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்திற்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். அதில் சி.பி.ஐ(எம்) பங்கேற்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழ்நாடு என்ற பெயரையே சர்ச்சை ஆக்கிய கவர்னர் ஆர்.என்.ரவி, அதைத் தொடர்ந்து அலையலையாக எழுந்த எதிர்ப்பிற்கு பின் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார். இருப்பினும், சட்டமன்றத்தில் இருந்து பாதியில் வெளிநடப்பு செய்த வரலாற்று தவறுக்காக, மாநில மக்களிடம் வருத்தம் தெரிவிக்கவோ, மன்னிப்பு கேட்கவோ இல்லை.

தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட 21 மசோதாக்களை பல மாதங்களாக கிடப்பில் போட்டு, அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை கொடுத்து வருகிறார்.

வாக்களித்த மக்களை அவமதிக்கிற இந்த கவர்னர் வெளியேற்றப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னணியில் போராடி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பது தான் தமிழ்நாட்டு மக்களின் உணர்வாகும். எனவே, சி.பி.ஐ(எம்) சார்பில் இந்த தேநீர் விருந்தில் பங்கேற்கும் கேள்வியே எழவில்லை" என்று அதில் கூறியுள்ளார்.

கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சியும் அறிவித்துள்ளது. அதே போல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கவர்னரின் தேநீர் விருந்தை தவிர்க்க முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story