"சமூகநீதி, அமைதி, வளம், வளர்ச்சி பெருகட்டும்" - டாக்டர் ராமதாஸ் தீபாவளி வாழ்த்து


சமூகநீதி, அமைதி, வளம், வளர்ச்சி பெருகட்டும் - டாக்டர் ராமதாஸ் தீபாவளி வாழ்த்து
x

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

தீபாவளி பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஜவுளி, பட்டாசு, பலசரக்கு உள்ளிட்ட பண்டிகைக்கால விற்பனை களைகட்டியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்தாலும், மக்கள் உற்சாகத்துடன் தீபாவளியை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்நிலையில் அரசியல் தலைவர்கள் பலர் தங்கள் தீபாவளி வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது;-

"மத்தாப்புகளின் திருவிழாவான தீபஒளித் திருநாளை உற்சாகமாகக் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தீபஒளித் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மனிதன் ஒரு சமூக விலங்கு. மனிதர்களால் தனித்து வாழ முடியாது. மனிதர்கள் தங்களின் உறவுகள், நண்பர்களுடன் ஒன்று கூடவும், மகிழ்ச்சியடையவும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கொண்டாட்டங்கள் அவசியமாகும். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்காகத் தான் தீபஒளித் திருநாள் போன்ற கொண்டாட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் தீபஒளித் திருநாள் மகிழ்ச்சிக்கான கருவி.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களில் சமூகநீதிக்கும் சறுக்கல்கள் ஏற்பட்டன. மக்கள் முன்னேறவும், சமத்துவத்தை உண்டாக்கவும் சமூகநீதி மிகவும் அவசியமாகும். சமூகநீதியின் ஒளியை சதிகார கூட்டத்தின் கைகள் தடுத்து நின்றாலும் மறைக்க முடியாது. சதிகளால் சறுக்கலுக்கு உள்ளான சமூகநீதி, கிரகணத்தை விலக்கி ஒளிவிட ஆயத்தமாகி வருவதை அறிந்து கொள்ள முடிகிறது.

மக்களுக்கு மகிழ்ச்சி நிலைக்க வேண்டும் என்றால் இல்லாமை கூடாது. இல்லாமையை விரட்டுவதற்கு கல்வியும், வேலைவாய்ப்பும் கட்டாயமாகும். கல்வி, வேலைவாய்ப்பு மட்டுமின்றி, சமூகநீதி, அமைதி, வளம், வளர்ச்சி, ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவம், பன்முகத்தன்மை உள்ளிட்ட பெருகவும், மக்களின் வாழ்வில் இல்லாமை இருள் விலகி இன்ப ஒளி நிறையவும் நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறேன்."

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


Next Story