மாநகராட்சி பகுதிகளில் உள்ள பழைய கட்டிடங்களை இடித்து அகற்றவேண்டும் - அதிகாரிகளுக்கு மேயர் பிரியா உத்தரவு


மாநகராட்சி பகுதிகளில் உள்ள பழைய கட்டிடங்களை இடித்து அகற்றவேண்டும் - அதிகாரிகளுக்கு மேயர் பிரியா உத்தரவு
x

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பழைய கட்டிடங்களை இடித்து அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார்.

சென்னை

சென்னை,

சென்னை மாநகராட்சியின் ஆகஸ்டு மாதத்துக்கான மாதாந்திர மன்றக்கூட்டம், ரிப்பன் மாளிகையில் நேற்று முன்தினம் கூடியது. அப்போது, அண்மையில் மாரடைப்பால் உயிரிழந்த 146-வது வார்டு கவுன்சிலர் ஆலப்பாக்கம் சண்முகம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஆகஸ்டு 31-ந்தேதிக்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி நேற்று மாநகராட்சி மன்றக்கூட்டம் மீண்டும் கூடியது. கூட்டத்துக்கு மேயர் பிரியா தலைமை தாங்கினார். துணை மேயர் மகேஷ் குமார், கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கேள்வி நேரத்தின்போது 196-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் அஸ்வினி கருணா பேசியதாவது:-

சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்துவதால் சமூக விரோத செயல்கள் அதிகமாக நடக்கிறது. போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே, சாலை ஓரங்களில் உள்ள வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேயர் பிரியா:- சாலை ஓரங்களில் அனுமதியின்றி நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த ஏற்கனவே போக்குவரத்து போலீசாருடன் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சாலை ஓரங்களில் உள்ள வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அ.தி.மு.க. கவுன்சிலர் சேட்டு (வார்டு 24) :

கவுன்சிலர்களுக்கு தகவல்

எனது வார்டுக்குட்பட்ட பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கியாஸ் குழாய் பதிக்கும் பணி நடைபெறுகிறது. சமீபத்தில் உட்புற பகுதியில் குழாய் பதிக்க ஆரம்பித்துள்ளார்கள். இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அனுமதி இல்லாமல் தான் வேலை நடக்கிறது என்று கூறப்படுகிறது. அதிகாரிகள் இதுபற்றி என்னிடம் தெரிவிக்கவில்லை. புதிய திட்டங்களுக்கு அனுமதி கொடுக்கும் போது கவுன்சிலர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். எங்களுக்கு தகவல் தெரிவிக்காததால் நாங்கள் மக்களிடம் பதில் சொல்ல முடியவில்லை.

மேயர் பிரியா: புகார் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். வார்டில் அதிகாரிகள் எந்த ஒரு பணியை மேற்கொள்ளும் போதும் அதுகுறித்து கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பலமுறை நான் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். பொதுமக்கள் கவுன்சிலர்களை தான் கேள்வி கேட்பார்கள். கவுன்சிலர்கள் கள ஆய்வு மேற்கொள்ளலாம். நீங்கள் கள ஆய்வு செல்லும் போது ஒப்பந்ததாரர்கள் தங்களுடைய பணியை சரிவர செய்யவில்லை என்றால் என்னிடம் தெரிவியுங்கள். அதன்படி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பின்னர், நேரமில்லா நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் கிரண் சர்மிலி (வார்டு 107) பேசியதாவது:-

கட்டிடங்களை இடிக்க வேண்டும்

இடியும் நிலையில் உள்ள பழைய கட்டிடங்களை இடித்து அகற்றாததால் பல இடங்களில் சமூக சீர்கேடுகள் நடந்து வருகிறது. பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.

மேயர் பிரியா:- மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பழைய கட்டிடங்களை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய கட்டிடங்கள் யார் மேலாவது விழுந்து அசம்பாவிதம் நடந்தால் மாநகராட்சிக்கு தான் கெட்டப்பெயர் உண்டாகும். இதேபோல, தெருக்களில் தேங்கும் மழைநீரை உடனடியாக அகற்றவில்லை என்றால் கவுன்சிலர்கள் என்னிடம் தகவல் தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கலாம்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

ஜி.எஸ்.டி. வரி

கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில் நிலைக்குழு தலைவர் (கணக்கு) தனசேகரன் பேசியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சி காலமான 2019-20-ம் நிதியாண்டில் மண்டலம் 4,5,6,8,9 மற்றும் 10-ல் இயங்கும் மாநகராட்சி எல்.கே.ஜி. மற்றும் யூ.ஜி.கே. வகுப்பு குழந்தைகளுக்கு தண்ணீர் பாட்டில்கள் ரூ.37 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்ததில் விதிகளை பின்பற்றவில்லை. இதேபோல ரூ.2 கோடியே 2 லட்சத்துக்கு 3 நிறுவனங்களிடமிருந்து பிளீச்சிங் பவுடர் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில், ரூ.27 லட்சத்து 85 ஆயிரம் ஜி.எஸ்.டி. வரியாக மாநகராட்சி நிதியிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரி இல்லாத பிளீச்சிங் பவுடருக்கு வரி கொடுத்தது குறித்து விசாரணை நடத்த மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

57 தீர்மானங்கள் நிறைவேற்றம்

மாமன்ற கூட்டத்தில், கதீட்ரல் சாலையில் உள்ள மேம்பாலத்திற்கு இசையமைப்பாளர் டாக்டர் எம்.பாலமுரளிகிருஷ்ணா மேம்பாலம் என பெயர் மாற்றம் செய்வது, சென்னை மாநகராட்சியில் சமுதாய நலக்கூடங்களில் ஓய்வு பெற்ற அலுவலர்களின் குடும்ப நிகழ்ச்சிக்கு 50 சதவீத சலுகை கட்டணத்தில் அனுமதி வழங்குவது உள்ளிட்ட 57 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story