முதல்-அமைச்சருடனான சந்திப்பு; மாநில விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கவர்னர் மாளிகை தகவல்


முதல்-அமைச்சருடனான சந்திப்பு; மாநில விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கவர்னர் மாளிகை தகவல்
x

நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கவர்னரிடம் முதல்-அமைச்சர் வலியுறுத்தியதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை,

தமிழக கவர்னரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை 5 மணிக்கு சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 25 நிமிடங்கள் வரை நீடித்தது. இந்த சந்திப்பின் போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை கவர்னரிடம் முதல்-அமைச்சர் அளித்தார்.

இந்த சந்திப்பு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையிலுள்ள சட்ட மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று கவர்னரிடம் முதல்-அமைச்சர் கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (திருத்தச்) சட்டமசோதா 1983, தமிழ்நாடு அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமை சட்டமுன்வடிவு 2022, தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டமுன்வடிவு 2022, உள்ளிட்ட 21 சட்ட மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் அளித்து, அரசியல் சாசனத்தின் உணர்வையும், தமிழக மக்களின் விருப்பத்தையும் நிலைநிறுத்த வேண்டும் என்று கவர்னரை முதல்-அமைச்சர் கேட்டுக் கொண்டதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கவர்னர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்-அமைச்சருடனான சந்திபின்போது மாநில விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தரப்பில் வெளியான செய்திக்குறிப்பில், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கவர்னரை வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படாமல், மாநில விவகாரங்கள் குறித்து விவாதித்ததாக மட்டுமே கவர்னர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story