பால் வியாபாரத்தை 24 மணி நேரமும் நடத்தலாம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


பால் வியாபாரத்தை 24 மணி நேரமும் நடத்தலாம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

பால் வியாபாரத்தை 24 மணி நேரமும் நடத்தலாம், போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மதுரை கே.கே.நகரை சேர்ந்த சிவராஜா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை கே.கே.நகர் விநாயகர் நகரில் பால் கடை நடத்தி வருகிறேன். வாடிக்கையாளர்களின் வசதியை கருத்தில் கொண்டு 24 மணி நேரமும் பால் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் கடையில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் இரவு நேரத்தில் பால் வியாபாரத்தை தடுக்கும் வகையில் அண்ணாநகர் போலீசார் தொந்தரவு செய்து வருகின்றனர். அத்தியாவசிய பொருளான பால் வியாபாரத்திற்கு பெரும் தடையாக போலீசார் இருந்து வருகின்றனர்.

கடந்த 2.6.2022-ல் தொழிலாளர் நலத்துறை பிறப்பித்த அரசாணையின்படி 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் கடைகளை நாள் முழுவதும் திறந்து வைக்கலாம். அதன்படி எங்கள் பால் வியாபாரத்தை நடத்துகிறோம். எனவே எங்களை போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது என கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே எங்கள் பால் கடை 24 மணி நேரமும் செயல்படலாம் என்றும், போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது என்றும் உத்தரவிட வேண்டும். தொழிலாளர் நலத்துறையின் அரசாணையை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை பிறப்பித்த அரசாணையின்படி மனுதாரர் கடையை 24 மணி நேரமும் திறந்து வைத்து நடத்தலாம். இதில் போலீசார் குறுக்கிடக்கூடாது என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.


Next Story