மினிலாரி தீப்பிடித்து எரிந்து ரூ.5 லட்சம் இறால் சேதம்
உளுந்தூர்பேட்டை அருகே மினிலாரி தீப்பிடித்து எரிந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள இறால் மீன்கள் சேதம் அடைந்தன.
உளுந்தூர்பேட்டை
தஞ்சாவூரில் இருந்து குளிர்சாதன வசதியுடன் கூடிய மினி லாரி ஒன்று ரூ.5 லட்சம் மதிப்புள்ள இறால் மீன்களை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி புறப்பட்டது. மினி லாரியை தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த அசார் என்பவர் ஓட்டினார். உடன் சையத் அபுபக்கர் என்பவரும் வந்தார். நேற்று அதிகாலை 2 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் வந்தபோது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற நெடுஞ்சாலை ரோந்து வாகனம் மீது மினி லாரி மோதியது.
இதில் மினி லாரியின் முன் பகுதியில் புகை வந்ததை அறிந்து படுகாயம் அடைந்த அசார், சையத் அபுபக்கர் ஆகிய இருவரும் கதவை திறந்து தப்பி ஓடினர். அடுத்த சில நிமிடங்களில் மினி லாரி தீப்பிடித்து மள,மள வென எரிய தொடங்கியது.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் படுகாயம் அடைந்த அசார் உள்ளிட்ட இருவரையும் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரத்துக்கு மேலாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் ரூ.5 லட்சம் இறாலுடன் மினி லாரி எாிந்து சேதம் அடைந்தது. பின்னர் அந்த வாகனத்தை போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். இந்த விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.