கோவை நேரு மைதானத்தில் நவீன ஓடுதளம் அமைக்கும் பணி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
நவீன வசதிகளுடன் கூடிய செயற்கை இழை ஓடுதளத்தை புனரமைக்கும் பணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
கோவை,
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக கடந்த 14-ந்தேதி உதயநிதி ஸ்டாலின் பதவியேற்று கொண்ட நிலையில், அவரின் முதல் அரசு நிகழ்ச்சி கோவையில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்தார்.
இதையடுத்து இன்று காலை கோவை நேரு விளையாட்டு மைதானத்திற்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அங்கு ரூ.7 கோடிக்கு நவீன வசதிகளுடன் கூடிய செயற்கை இழை(சிந்தடிக்) ஓடுதளத்தை புனரமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து விளையாட்டு வீரர்கள், அமைப்புகளின் நிர்வாகிகளை சந்தித்து அவர்களுடன் உரையாடினார்.
இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். கூட்டத்தில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.