குமரி அருகே மாயமான கல்லூரி மாணவி காதலன் வீட்டில் மீட்பு
போலீசாரை கண்டதும் வாலிபர் தப்பியோடிவிட்டார்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 19 வயதுடைய கல்லூரி மாணவி கடந்த 3 நாட்களுக்கு முன் மாயமானார். இதுகுறித்து அவருடைய பெற்றோர் அருமனை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார், மாணவியின் உறவினர்கள் மற்றும் தோழிகளிடமும் விசாரணை நடத்தினர்.
அப்போது மாணவி மங்காடு அருகே உள்ள ஒரு வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் சென்றதாக தகவல் கிடைத்தது. அந்த வாலிபர் மாணவியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பெற்றோரிடம் அவரை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அடம் பிடித்துள்ளார். பெற்றோரின் சம்மதத்தின் பெயரில் மாணவி அவர்கள் வீட்டிலேயே தங்கி இருந்தார்.
இதனை அறிந்த போலீசார் மாணவியை தேடி வாலிபரின் வீட்டுக்கு சென்றனர். போலீசாரை கண்டதும் அந்த வாலிபர் வீட்டில் இருந்து தப்பி ஓடினார். இதையடுத்து போலீசார் அந்த மாணவியை மீட்டு அருமனை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
அங்கு மாணவியிடம் விசாரித்த போது இருவரும் காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்யலாம் என்று கூறி அழைத்ததால் வாலிபருடன் சென்றதாகவும் தெரிவித்தார். தற்போது அந்த வாலிபர் மாணவியை விட்டுவிட்டு ஓடிவிட்டதால் இனி அங்கு செல்லவில்லை பெற்றோருடன் செல்வதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் மாணவியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.