மிசா நடவடிக்கை காலத்தில் போலீஸ் பாதுகாப்போடு கல்லூரிக்கு பரீட்சை எழுதவந்தேன்- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


மிசா நடவடிக்கை காலத்தில் போலீஸ் பாதுகாப்போடு கல்லூரிக்கு பரீட்சை எழுதவந்தேன்- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

பட்டம் பெறுபவர்களை ‘சீனியர்' என்ற முறையில் வாழ்த்துகிறேன் என்று கூறியதோடு, மிசா நடவடிக்கை காலத்தில் போலீஸ் பாதுகாப்போடு கல்லூரிக்கு பரீட்சை எழுதவந்தேன் என்று கல்லூரி கால நினைவுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு கூர்ந்தார்.

பட்டமளிப்பு விழா

சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநில கல்லூரியின் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி முன்னிலை வகித்தார். இதில் தயாநிதிமாறன் எம்.பி., உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், கல்லூரிக்கல்வி இயக்குனர் எம்.ஈஸ்வரமூர்த்தி, மண்டல இணை இயக்குனர் ஆர்.ராவணன், மாநில கல்லூரி முதல்வர் ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தபோது, மாணவ-மாணவிகள் ஆரவாரத்தோடு அவரை வரவேற்றனர். பட்டமளிப்பு விழாவில், 1,995 மாணவர்கள், 1,214 மாணவிகள், ஒரு திருநங்கை என மொத்தம் 3 ஆயிரத்து 210 பேருக்கு பட்டங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவர்களில் முதல் தகுதிபெற்ற 78 பேருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பட்டங்களை வழங்கினார். முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் பேசியதாவது:-

வாழ்த்துகிறேன்

முதலில் கையில் பட்டங்களுடனும், மனதில் கனவுகளுடனும் அமர்ந்திருக்கும் நம்முடைய மாணவ-மாணவிகளுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டும் என்ற வேண்டுகோள் மட்டுமல்ல, அமையும் என்ற நம்பிக்கையோடு மீண்டும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக மட்டும் நான் உங்களை வாழ்த்த வரவில்லை. இந்த கல்லூரியின் முன்னாள் மாணவர் என்ற முறையிலும், உங்களை வாழ்த்துவதற்காக நான் வந்திருக்கிறேன். உங்களுடைய சீனியர் என்ற அடிப்படையில் என்னுடைய வாழ்த்துகளைத் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

'மிசா' கொடுமையான சட்டம்

இங்கு எல்லோரும் சொன்னார்கள், 1972-ம் ஆண்டு, ஜூன் மாதம் 15-ந் தேதி, இந்த கல்லூரியில் அரசியல் அறிவியல் பாட மாணவனாக நான் சேர்ந்து படித்தேன். முழுமையாக என்னை கல்வியில் ஈடுபடுத்திக்கொண்டேனா என்றால் இல்லை. ஏனென்றால், அப்போதே எனக்கு அரசியல் ஆர்வம் வந்துவிட்டது. அதுவும் அதிகமான ஆர்வம் கொண்டவனாக, நான் நேரடியாக அரசியலில் இறங்கிவிட்டேன். 1971-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றிக்காக, அதனுடைய பிரசாரத்திற்காக தேர்தல் பிரசார நாடகங்களை ஊர்ஊராக, தொகுதி தொகுதியாக சென்று நான் நடத்தினேன்.

அந்த காரணத்தால், என்னால் முழுமையாக படிப்பில் கவனம் செலுத்தமுடியாமல் போய்விட்டது. படிப்பில் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளாத நான், இந்தியாவில் நெருக்கடி நிலை ஏற்பட்ட நேரத்தில், தி.மு.க.வை சார்ந்திருக்கக்கூடிய 500-க்கும் மேற்பட்டவர்கள், அதாவது 'மிசா' என்ற அந்த கொடுமையான சட்டத்தை, நெருக்கடி நிலையை, தி.மு.க. அன்றைக்கு ஆட்சிப்பொறுப்பில் இருந்தபோது, அதை எதிர்த்த காரணத்தால், தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்று கொண்டிருந்த ஆட்சி அன்றைக்கு கலைக்கப்பட்டது.

பரீட்சை எழுதி சென்றேன்

கலைக்கப்பட்டவுடன் 500-க்கும் மேற்பட்ட தி.மு.க.வை சார்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு, மிசா கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டார்கள். நான் சென்னை சிறைச்சாலையில் ஓராண்டு காலம் இருந்தேன். நினைத்து பார்க்கிறேன். அந்த மிசா சட்டத்தில் சென்னை சிறையில் சிறைவாசியாக இருந்தபோது தான், அங்கிருந்து போலீஸ் பாதுகாப்போடு இந்த கல்லூரிக்கு வந்து நான் பரீட்சை எழுதிவிட்டுச்சென்றேன். அதையெல்லாம் இப்போது நான் நினைத்துப்பார்க்கிறேன். இப்போது தமிழ்நாட்டினுடைய முதல்-அமைச்சராக உயர்ந்துள்ளேன் என்று சொல்லி, இதனையே நீங்கள் அனைவரும் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

விதிவிலக்குகள் என்பது விதிகள் ஆகாது. இதைத்தான் தலைவர் அடிக்கடி குறிப்பிட்டுக் காட்டுவார். கல்வியைக் கட்டாய கடமையாக வலியுறுத்தி, இன்று ஒரு இயக்கமாகவே அதை நான் தொடங்கியிருக்கிறேன். கல்விதான் யாராலும் திருடமுடியாத உண்மையான சொத்து. அத்தகைய அறிவு சொத்துகளை உருவாக்கித்தரக்கூடிய மகத்தான கல்லூரிதான், இந்த மாநில கல்லூரி என்பதை நான் இங்கே பெருமையோடு பதிவுசெய்ய விரும்புகிறேன். மாநில 'கல்லூரி'யாக இருந்தாலும், மாநில கல்லூரி பல்கலைக்கழகம் போல இது செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த பணிகளை விடாமல் தொடருங்கள் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மரக்கன்று நட்டார்

முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்லூரி வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டார். அதனைத் தொடர்ந்து 200 மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தில் நடப்பட இருப்பதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது. விழாவில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசும்போது, 'என்னுடைய பட்டமளிப்பு விழாவில் கூட நான் அங்கி அணியவில்லை. இப்போதுதான் முதல் தடவையாக இதை அணிகிறேன். இதற்கு வாய்ப்பு வழங்கிய முதல்-அமைச்சருக்கும், அமைச்சருக்கும் நன்றியை தெரிவிக்கிறேன்' என்றார்.

மாநில கல்லூரி வளாகத்தில் கருணாநிதி பெயரில் அரங்கம்

மாநில கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, சில அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

பல ஊர்களில் பல அரசு நிகழ்ச்சிக்கு நான் செல்கிறபோது, ஆங்காங்கே சில அறிவிப்புக்களை அரசின் சார்பில், முதல்-அமைச்சர் என்கின்ற முறையில் நான் வெளியிடுவது உண்டு. நான் படித்த கல்லூரிக்கு செல்கிறேன். அங்கே சென்று என்ன அறிவிப்புக்களை வெளியிடலாம் என்று அதிகாரிகளோடு கலந்துபேசி, யோசித்துக்கொண்டிருந்தபோது, சில முடிவுகளை எடுத்திருக்கிறோம். அதை இப்போது உங்கள் முன்னால் எடுத்துவைக்க விரும்புகிறேன். இந்த சிறப்புக்குரிய மாநில கல்லூரியின் மேம்பாட்டுக்கான ஒரு சில அறிவிப்புகளை நான் வெளியிட விரும்புகிறேன்.

2 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில், நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கருணாநிதி பெயரால் மாபெரும் அரங்கம் மாநில கல்லூரி வளாகத்தில் கட்டித்தரப்படும். தயாநிதிமாறன் எம்.பி.யும், உதயநிதி எம்.எல்.ஏ.வையும் நான் கேட்டுக்கொள்கிறேன். உங்களால் இயன்ற அளவு அந்த தொகுதி மேம்பாட்டு நிதியை அதற்கு நீங்கள் வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் இங்கே படிக்கிறார்கள். தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் இருந்து அவர்கள் இங்கே வந்து, தங்கி படித்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கென்று விடுதி கிடையாது. அவர்களுக்கான விடுதி, மாநில கல்லூரி வளாகத்திலேயே அமைத்துத் தரப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முதல்-அமைச்சரை உரிமையோடு அழைத்த பெண்

மாநில கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை வழங்கிய பின்னர், அவர்களுக்கான உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடக்க இருந்தது. அப்போது கூட்டத்தில் இருந்து ஒரு பெண், அய்யா... முதல்-அமைச்சர் அய்யா... உங்களிடம் பேச வேண்டும்.... என்று உரிமையோடு சத்தமிட்டு அழைத்தார்.

அதனை மேடையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வும் பார்த்தனர். இதையடுத்து அந்த பெண்ணை அமைதியாக இருக்கும்படி போலீசார் வலியுறுத்தினர். அதனைத் தொடர்ந்து பட்டமளிப்பு விழா உறுதிமொழியை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வாசிக்க, மாணவ-மாணவிகள் கூறி முடித்தனர்.

பட்டமளிப்பு விழா முடிந்ததும், அந்த சம்பந்தப்பட்ட பெண்ணிடம் இருந்து கோரிக்கை மனுவை வாங்கி வரச்சொல்லி முதல்-அமைச்சர் உத்தரவிட்டதாகவும், அதனை போலீசார் கேட்டு வாங்கி முதல்-அமைச்சர் வசம் ஒப்படைத்ததாகவும் தகவல் வெளியானது.


Next Story