2024 நாடாளுமன்ற தேர்தல் பணியை விரைவுப்படுத்த வேண்டும் - தி.மு.க. தொகுதி பார்வையாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்


2024 நாடாளுமன்ற தேர்தல் பணியை விரைவுப்படுத்த வேண்டும் - தி.மு.க. தொகுதி பார்வையாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
x

மாவட்ட செயலாளரை விட தொகுதி பார்வையாளர்களுக்கு பொறுப்பு அதிகம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், கட்சியால் நியமிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் காணொலி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இதில் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளைச் சேர்ந்த தொகுதி பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள், பூத் கமிட்டி அமைத்தல், புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்சியில் புதிதாக 1 கோடி உறுப்பினர் சேர்க்கைக்கான பணியை மாவட்ட வாரியாக துரிதப்படுத்த வேண்டும் எனவும், மாவட்ட செயலாளரை விட தொகுதி பார்வையாளர்களுக்கு பொறுப்பு அதிகம் எனவும் தெரிவித்தார்.

மேலும் பூத் கமிட்டி அமைக்கும் பணியை விரைவில் முடிக்க வேண்டும் என குறிப்பிட்ட அவர், தொகுதி பார்வையாளர்கள் தான் தி.மு.க.வின் வெற்றி அடித்தளம் என்று கூறினார். அதோடு வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் விரைவுப்படுத்த வேண்டும் என தி.மு.க. தொகுதி பார்வையாளர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.



Next Story