தமிழ்நாடு, புதுச்சேரியில் இந்தியா கூட்டணியை மு.க.ஸ்டாலின் வழிநடத்துவார்: தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்


தமிழ்நாடு, புதுச்சேரியில் இந்தியா கூட்டணியை மு.க.ஸ்டாலின் வழிநடத்துவார்: தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்
x
தினத்தந்தி 20 Jan 2024 7:00 PM GMT (Updated: 20 Jan 2024 7:00 PM GMT)

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற முடியாத மோடியால், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்ய மட்டும் முடிகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கூறினார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் அளித்த பேட்டியில் இந்தியா கூட்டணியின் வலிமையான தலைவராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என்றும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இந்தியா கூட்டணியை மு.க.ஸ்டாலின் வழிநடத்துவார் என்றும் தெரிவித்து உள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், தமிழ்நாடு காங்கிரசின் புதிய மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் முன்னிலையில் மாநில தேர்தல் குழு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு முன்னதாக அஜோய் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. - காங்கிரஸ் உடனான கூட்டணி உறுதியாக உள்ளது. தமிழகம், புதுச்சேரியுடன் சேர்த்து 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். இந்தியா கூட்டணியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலிமையான தலைவராக இருக்கிறார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்தியா கூட்டணியை மு.க.ஸ்டாலின் வழி நடத்துவார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவை தி.மு.க. அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு இன்னும் 2 தினங்களில் அறிவிக்கப்படும். ஜனாதிபதி ஒரு பழங்குடியின பெண் என்பதால் அவரை ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி அழைக்கவில்லை. மத்திய பா.ஜனதா அரசு ராமரின் பெயரால் கோடிக்கணக்கான ரூபாயை செலவழித்து வருகிறது. இதன் மூலம் பா.ஜனதா தலைவர்கள் சொத்துக்களை குவித்து வருகின்றனர். அதே நேரத்தில் நெல்லை மற்றும் சென்னை வெள்ள பாதிப்புகளுக்காக தமிழக அரசு நிவாரணத் தொகையாக கேட்கும் ரூ.38 ஆயிரம் கோடியை வழங்கவில்லை. பிரதமரின் ஏமாற்று வேலையை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற முடியாத மோடியால், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்ய மட்டும் முடிகிறது. தமிழக மக்கள் மிகவும் புத்திசாலிகள். எனவே, காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி தமிழகத்தில் 39 இடங்களையும் கைப்பற்றும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து கே.எஸ்.அழகிரி கூறும்போது, ''பா.ஜனதாவால் தமிழகத்தில் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. பிரதமர் மோடியும், கவர்னர் ஆர்.என்.ரவியும் இருக்கும் வரை எங்களுடைய வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது'' என்றார்.


Next Story