திருத்தணி முருகன் கோவிலில் குரங்குகள் பிடிப்பு


திருத்தணி முருகன் கோவிலில் குரங்குகள் பிடிப்பு
x
தினத்தந்தி 6 Aug 2023 11:40 AM GMT (Updated: 6 Aug 2023 12:20 PM GMT)

திருத்தணி வனசரகர் தலைமையில் வனஊழியர்கள் மலைக்கோவிலில் கூண்டுகளை வைத்து 20-க்கும் மேற்பட்ட குரங்குகளை பிடித்து ஆந்திர மாநில வனப்பகுதியில் விட்டனர்.

திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டும் இல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். விசேஷ நாட்களான ஆடிக்கிருத்திகை, தைப்பூசம், மற்றும் கிருத்திகை நாட்களில் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம்.

தற்போது கோவிலில் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து காணப்படுகிறது. கோவிலில் வழங்கப்படும் அன்னதானத்தை பக்தர்கள் சாப்பிடும்போது அதை குரங்குகள் பறித்து செல்கின்றன. மேலும் பக்தர்கள் கையில் கொண்டு வரும் பார்சல்களை குரங்கள் திடீரென பாய்ந்து பறித்து விடுகிறது. இந்நிலையில் நாளை முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா ஆடி அஸ்வினியுடன் வெகு விமர்சையாக தொடங்க உள்ளது.

எனவே கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி முருகன் கோவில் நிர்வாகம் கோவிலில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடிக்க வனத்துறையினரிடம் அனுமதி கோரியது. திருத்தணி வனசரகர் அருள்நாதன் தலைமையில் வனஊழியர்கள் மலைக்கோவிலில் கூண்டுகளை வைத்து 20-க்கும் மேற்பட்ட குரங்குகளை பிடித்தனர். பின்னர் பிடிபட்ட குரங்குகளை ஆந்திர மாநில வனப்பகுதியில் விட்டனர்.


Next Story