கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல் - மாநகர பஸ் கண்டக்டர் சாவு


கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல் - மாநகர பஸ் கண்டக்டர் சாவு
x

கும்மிடிப்பூண்டி அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மாநகர பஸ் கண்டக்டர் பரிதாபமாக பலியானார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தண்டலச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 54). சென்னை மாநகர பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி கலைச்செல்வி (47) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் இரவு வயல்வெளியில் இருந்து வீட்டிற்கு கெட்னமல்லி கிராமத்தை சேர்ந்த நண்பர் சுரேஷ் (50) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து சென்றார். மோட்டார் சைக்கிளை சுரேஷ் ஓட்டிச்சென்றார். இதையடுத்து கவரைப்பேட்டை-சத்யவேடு சாலையில் மோட்டார் சைக்கிளில் திரும்பும்போது, தண்டலச்சேரி அருகே கவரைப்பேட்டையில் இருந்து வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், சுரேஷ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் பலமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து, படுகாயமடைந்த 2 பேரையும் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் மாநகர பஸ் கண்டக்டர் சேகர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற நண்பர் சுரேஷ் கவலைக்கிடமான நிலையில் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story