நவராத்திரி திருவிழா: வருகிற 5-ந் தேதி வரை சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி


நவராத்திரி திருவிழா: வருகிற 5-ந் தேதி வரை சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி
x

நவராத்திரி திருவிழாவையொட்டி வருகிற 5-ந் தேதி வரை சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

விருதுநகர்,

சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி, பிலாவடி கருப்பசாமி, ஆனந்தவல்லி அம்மன் கோவில்கள் உள்ளன. இங்கு ஆடி அமாவாசை, நவராத்திரி, சிவராத்திரி, தை அமாவாசை விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

இங்குள்ள ஆனந்தவல்லி அம்மனுக்கு நவராத்திரி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு விழா நேற்று காலை 5 மணிக்கு காப்பு கட்டு வைபவத்துடன் தொடங்கியது.

விழாவினை முன்னிட்டு தினமும் இரவு 6 மணி முதல் 9 மணி வரை அம்மன் கொலு வீற்றிருந்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. வருகிற 4-ந் தேதியன்று இரவு 7 மணிக்கு சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஆனந்தவல்லி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பஜனை வழிபாடு நடைபெற உள்ளது.

5-ந் தேதியன்று விஜயதசமியை முன்னிட்டு ஆனந்தவல்லி அம்மனுக்கு மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பின்னர் அம்பு எய்து அரக்கனை அழிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

வருகிற 5-ந் தேதி வரை தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி அளித்துள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகம் செய்து வரும் நிலையில் சில கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இரவில் கோவிலில் தங்க அனுமதி கிடையாது.

கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கு அனுமதி கிடையாது. வனப்பகுதி பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பக்தர்கள் உணவு சமைத்து சாப்பிடுவதை தவிர்த்து கோவில் சார்பில் வழங்கப்படும் அன்னதானத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். மழை பெய்யும் நாட்களில் மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நவராத்திரி திருவிழாவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story