கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது
கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது.
நவராத்திரி உற்சவம்
திருச்சி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நேற்று நவராத்திரி விழா தொடங்கியது. இதில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் நேற்று தொடங்கியது. உற்சவத்தின் முதல் நாளான நேற்று மதியம் மூலஸ்தானத்தில் ரெங்கநாச்சியார் திருமஞ்சனம் கண்டருளுளினார். பின்னர் மாலையில் மூலஸ்தானத்தில் இருந்து ரெங்கநாச்சியார் புறப்பட்டு இரவு 7 மணிக்கு கொலுமண்டபம் வந்தடைந்தார். கொலு இரவு 7.45 மணிக்கு தொடங்கி இரவு 8.45 மணி வரை நடைபெற்றது. இரவு 9.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானம் சென்றடைந்தார்.
2-ம் திருநாள் முதல் 6-ம் திருநாள் வரையும் மற்றும் 8-ம் திருநாளான 22-ந்தேதியும் ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு கொலு மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 21-ந் தேதி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை நடைபெறுகிறது. விழாவின் 9-ம் நாளான 23-ந்தேதி சரஸ்வதி பூஜையுடன் நவராத்திரி உற்சவ விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் மாரியப்பன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
திருவானைக்காவல்
இதேபோல் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான நேற்று மாலை அம்மன் ஏகாந்த அலங்காரத்தில் 2-ம் பிரகாரத்தில் வலம் வந்து, கண்ணாடிசேவை கண்டருளி, கொலுமண்டபத்தில் எழுந்தருளுளினார். அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 24-ந் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் அம்மன் தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவையொட்டி நவராத்திரி மண்டபத்தில் தினமும் மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
சமயபுரம்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா நேற்று தொடங்கியதையொட்டி, கோவில் உள்பிரகாரத்தில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டது. இரவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் குமாரிகா அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பய பக்தியுடன் தரிசித்தனர்.
இன்று (திங்கட்கிழமை) திரிமூர்த்தி அலங்காரத்திலும், மேலும் 24-ந் தேதி வரை தினமும் ஒவ்வொரு அலங்காரத்திலும் அம்மன் எழுந்தருளுகிறார். மேலும் தினமும் இரவில் பரதநாட்டியம் மற்றும் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் அர்ச்சகர்கள் கோவில் பணியாளர்கள் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
கமலவல்லி நாச்சியார் கோவில்
உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியதையொட்டி நேற்று காலை முதல் மதியம் வரை தாயார் மூலஸ்தானத்தில் திருமஞ்சனம் கண்டருளல் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு தாயார் புறப்பட்டு நவராத்திரி கொலு மண்டபம் வந்தடைந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வருகிற 19-ந்தேதி திருவடி சேவை நடைபெறுகிறது.
இதேபோல் உறையூர் வெக்காளியம்மன் கோவில், தென்னூர் உக்கிரகாளியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை செய்து கொலு மேடை அமைக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் பல்வேறு வீடுகளில் கொலு மேடை அமைத்து பூஜை செய்யப்பட்டது.