ஓட்டப்பிடாரம் அருகே பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் தர்ணா போராட்டம்


ஓட்டப்பிடாரம் அருகே பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 21 Jun 2023 6:45 PM GMT (Updated: 22 Jun 2023 11:05 AM GMT)

ஓட்டப்பிடாரம் அருகே மாணவர்கள், பெற்றோர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடராம்:

ஓட்டப்பிடாரம் அருகே பள்ளி ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை மீண்டும் பணியமர்த்த கோரியும் மாணவர்கள், பெற்றோர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர் அதே பள்ளியில் மீண்டும் நியமனம் செய்யப்பட்டார்.

ஆசிரியர் இடமாற்றம்

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கவர்ணகிரி கிராமத்தில் தூ.நா.தி.தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளி ஆசிரியர் ஜெபராஜ் பெரியநத்தம் கிராமத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கடந்த 9 மாதத்திற்கு முன்பு தான் இந்த பள்ளியில் அவர் ஆசிரியராக சேர்ந்தார்.

தர்ணா போராட்டம்

இந்த நிலையில் அவரை இடமாற்றம் செய்யதை கண்டித்தும், அவரை இதே பள்ளியில் பணியில் தொடர அனுமதிக்க வலியுறுத்தியும் நேற்று காலையில் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றோருடன் சேர்ந்து பள்ளி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட தொடக்கப்பள்ளி அலுவலர் சின்ராஜ் தலைமையில் ஓட்டப்பிடாரம் வட்டார கல்வி அலுவலர் மகாலட்சுமி, தாசில்தார் சுரேஷ், மண்டல துணை தாசில்தார் மகாராஜன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவியர், பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆசிரியருக்கு வரவேற்பு

இதில், மீண்டும் இதே பள்ளியில் ஆசிரியர் ஜெபராஜ் நியமிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து மாணவ, மாணவியரும் பெற்றோரும் போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து பள்ளிக்கு வந்த ஆசிரியர் ஜெபராஜை மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் வரவேற்று அழைத்து சென்றனர். தொடர்ந்து பள்ளிக்கூடம் நடந்தது. இந்த போராட்டத்தால் கிராமத்தில் பரபரப்பு காணப்பட்டது.


Next Story