தேனி அருகேவீட்டில் கஞ்சா பதுக்கிய வியாபாரிக்கு 10 ஆண்டு சிறை
தேனி அருகே வீட்டில் கஞ்சா பதுக்கிய வியாபாரிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கஞ்சா பதுக்கல்
தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டி திருச்செந்தூர் காலனியை சேர்ந்தவர் வீரராஜ் (வயது 65). இவரது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்துள்ளதாக கடந்த 2015-ம் ஆண்டு பழனிசெட்டிபட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த 50 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக வீரராஜ், அவருடைய மனைவி செல்வராணி, கோடாங்கிபட்டியை சேர்ந்த ராஜா மனைவி போதுமணி (63), நதீஷ் (48) ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் 4 பேரையும் அடுத்தடுத்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறை தண்டனை
இந்த வழக்கு மதுரையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை நடந்து வந்த போது, செல்வராணி இறந்து விட்டார். இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி செங்கமல செல்வன் நேற்று தீர்ப்பு கூறினார்.
அதில், இந்த வழக்கில் வீரராஜிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும், போதுமணி, நதீஷ் ஆகிய 2 பேரையும் விடுதலை செய்தும் நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து வீரராஜை போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் சிறப்பாக விசாரணை நடத்திய அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி, தற்போதைய இன்ஸ்பெக்டர் ராஜேஷ், கோர்ட்டு பணிக்கான ஏட்டு வினோத் ஆகியோருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பாராட்டு தெரிவித்தார்.