நீட் தேர்வு விடைத்தாள் மாற்றம்: ஐகோர்ட்டில் இன்று விசாரணை


நீட் தேர்வு விடைத்தாள் மாற்றம்: ஐகோர்ட்டில் இன்று விசாரணை
x

கோப்புப்படம்

மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி கேட்டு மாணவி தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு இன்று விசாரிக்கிறது

சென்னை,

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை 17-ந் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகளும், மாதிரி விடைகளும் ஆகஸ்டு 31-ந் தேதி வெளியிடப்பட்டது. மேலும் விடைத்தாள்கள் மாணவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இதில் தனது விடைத்தாள் மாறி விட்டதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் வேளச்சேரியைச் சேர்ந்த மாணவி பவமிர்த்தினி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், நீட் தேர்வில் 132 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக விடைத்தாள் எனக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது என்னுடைய விடைத்தாள் கிடையாது. ஏன் என்றால், தேர்வில் 13 கேள்விகளுக்கு நான் விடை அளிக்கவில்லை. ஆனால், அந்த விடைத்தாளில் 60 கேள்விகள் விடையளிக்காமல் உள்ளது. விடைத்தாளில் உள்ள கைரேகையை சரி பார்த்தால் எனது விடைத்தாள் எது என கண்டுபிடிக்க முடியும்? எனவே, எனது விடைத்தாளை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கும், தேசிய தேர்வு முகமைக்கும் உத்தரவிட வேண்டும். மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள என்னை அனுமதிக்கவும், மருத்துவ படிப்பில் ஒரு இடத்தை காலியாக வைத்திருக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி ஆர்.சுப்பிரமணியனிடம் மனுதாரர் வக்கீல் ஏ.சரவணன் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த வழக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரிப்பதாக கூறியுள்ளார்.


Next Story