கிளாம்பாக்கம் வந்து செல்ல அரசு விரைவு பஸ் பயணிகளுக்கு இன்று முதல் புதிய திட்டம்


கிளாம்பாக்கம் வந்து செல்ல அரசு விரைவு பஸ் பயணிகளுக்கு இன்று முதல் புதிய திட்டம்
x

கிளாம்பாக்கம் வந்து செல்ல அரசு விரைவு பஸ் பயணிகளுக்கு புதிய திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படுகிறது.

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், மாநகர் போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கான மொபைல் செயலியையும், அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில் முன்பதிவு செய்யும் பயணிகள் ரூ.40 கூடுதலாக செலுத்தி கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பஸ் முனையத்தில் இருந்து பிற இடங்களுக்கு செல்லவும், பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு வரவும் மாநகர் போக்குவரத்துக் கழக பஸ்களில் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

அரசு விரைவு போக்குவரத்துக்கழகப் பஸ்களில் முன்பதிவு செய்யும் பயணிகள் ரூ.40 கூடுதலாக கட்டணம் செலுத்தும் பட்சத்தில், கால விரையமின்றி கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் பல்வேறு இடங்களுக்கும், சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும், 4 மணி நேரத்திற்குள், 2, 3 ஆகிய மாநகர் போக்குவரத்து கழக பஸ்களில் பயணம் செய்து விரைவாக இடத்தை அடையும் வகையில் இத்திட்டம் 1-ந் தேதி (இன்று) முதல் செயல்படுத்தப்படுகிறது.

மாநகர் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான செயலியின் மூலமாக, நிர்வாகத்தின் சுற்றறிக்கைகள் மற்றும் பல்வேறு செய்திகளை பணியாளர்கள் அறிந்து கொள்ளவும், பணியாளர்கள் விடுப்பு எடுக்க விண்ணப்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இவ்விழாவில் மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான்வர்கீஸ், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் மோகன், மாநகர் போக்குவரத்துக் கழக இணை மேலாண் இயக்குனர் குணசேகரன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story