புத்தாண்டு கொண்டாட்டம்: ஊட்டி, கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்


புத்தாண்டு கொண்டாட்டம்: ஊட்டி, கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சுற்றுலா பயணிகள் ஊட்டி, கொடைக்கானலில் குவிந்தனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பிரதேசமாகவும், சர்வதேச சுற்றுலாத்தலமாகவும் உள்ளது. அத்துடன் குளு, குளுவென ஊட்டியின் காலநிலை காணப்படுகிறது. இவைகளை கண்டு ரசித்து அனுபவிக்க சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் பண்டிகை ஆகிய தொடர் விடுமுறை காணரமாக பொழுதுபோக்குவதற்காக ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளனர். இதையொட்டி ஊட்டியில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் உள்ள அறைகள் நிரம்பி வழிகிறது. இந்த நிலையில் நேற்று தனியார் ஓட்டல்கள் மற்றும் காட்டேஜ்களில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது.

அதன்படி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட சற்று அதிகமாக இருந்தது. அங்கு கண்ணாடி மாளிகையில் பல்வேறு வண்ணங்களில் பூத்து குலுங்கிய மலர்களை கண்டு ரசித்தனர். அலங்கார செடிகள், செல்பி ஸ்பாட்டில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இத்தாலியன் பூங்கா மேல் பகுதியில் உள்ள கண்ணாடி மாளிகையில் உள்ள பல வகையான கள்ளி செடிகளையும் பார்வையிட்டனர்.

படகு சவாரி

ஊட்டி படகு இல்லத்தில் மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகுகளில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்து மகிழ்ந்தனர். காட்சி மாடத்தில் நின்று ஏரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். பின்னர் படகு இல்ல சாலையில் குதிரை சவாரி சென்று உற்சாகம் அடைந்தனர்.

இதேபோல் ஊட்டி தேயிலை பூங்கா, ரோஜா பூங்கா, பைன்பாரஸ்ட், சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் அதிகரித்து காணப்பட்டனர். இதனால் ஊட்டி நகர் உள்பட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கொடைக்கானல்

கொடைக்கானலில் தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.


Next Story