அமைச்சர் தங்கம் தென்னரசு வழக்கு: புலன் விசாரணை அதிகாரி இன்று ஆஜராக சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


அமைச்சர் தங்கம் தென்னரசு வழக்கு: புலன் விசாரணை அதிகாரி இன்று ஆஜராக சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 28 Feb 2024 10:52 PM GMT (Updated: 28 Feb 2024 11:47 PM GMT)

அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த புலன் விசாரணை அதிகாரி இன்று (வியாழக்கிழமை) நேரில் ஆஜராகும்படி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகியோரை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்ய சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மனைவி தரப்பில் டெல்லி மூத்த வக்கீல் ரஞ்சித் குமார் ஆஜராகி வாதிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:- இந்த வழக்கே அரசியல் உள்நோக்கத்துடன் தொடரப்பட்டவை. அரசியலில் எதிர்கட்சியை சேர்ந்தவரின் மனைவி என்பதற்காக முறையான விசாரணையைக் கூட நடத்தாமல், பாரபட்சமான முறையில் வழக்கை போலீசார் தொடர்ந்துள்ளனர். இது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கே எதிரானது. என் கட்சிக்காரர் தன்னுடைய வருமானத்துக்கு உரிய கணக்கை தாக்கல் செய்துள்ளார். அதற்கு உரிய வருமான வரியையும் தாக்கல் செய்துள்ளார். இத்தனை ஆதாரங்கள் இருந்தும், அவற்றை கணக்கில் கொள்ளாமல், அரசியல் பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் புலன் விசாரணையின்போது, கூடுதல் ஆதாரங்களை சேகரித்து, அதன் அடிப்படையில், போலீசார் வழக்கை முடித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதை ஏற்று வழக்கில் இருந்து என் கட்சிக்காரரை விடுவித்து சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் முதல்கட்ட விசாரணையில், வாடகை வருவாய், விவசாய வருவாய் உள்ளிட்டவைகளை போலீசார் கணக்கில் கொள்ளவில்லை. முதல் அறிக்கையில் சேமிப்பு தொகை குறைத்து காட்டப்பட்டுள்ளது. செலவு கணக்குகளையும் முறையாக கணக்கிடவில்லை.

அதனால் மேல் விசாரணை அறிக்கையை ஏற்று, ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு கோர்ட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து உத்தரவிட்டதால், அந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய தேவையில்லை. முதலில் நடந்த விசாரணையில் திருப்தி இல்லாத காரணத்தால், மேல்விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, இதில் எந்த விசாரணையை ஏற்பது என்பது சம்பந்தப்பட்ட சிறப்பு கோர்ட்டின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது. இவ்வாறு வாதிட்டார்.

இதையடுத்து தங்கம் தென்னரசு தரப்பில் மூத்த வக்கீல் ரமேஷ் வாதிட்டார். அப்போது நீதிபதி, "வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி தாக்கல் செய்த மனுவுக்கு புலன் விசாரணை அதிகாரி பூமிநாதன் முதலில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பின்னர், அவரே இந்த வழக்கை மேல்விசாரணைக்கு அனுமதி கோரியுள்ளார். எனவே, இதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்க வேண்டியதுள்ளதால், நாளை (இன்று) பிற்பகலில் அவர் நேரில் ஆஜராக வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.


Next Story