என்.எல்.சி. நிலம் எடுப்பு விவகாரத்தில் பா.ம.க. வீண் வதந்தியை பரப்புகிறது - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்


என்.எல்.சி. நிலம் எடுப்பு விவகாரத்தில் பா.ம.க. வீண் வதந்தியை பரப்புகிறது - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
x

நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக என்.எல்.சி. நிலம் எடுப்பு விவகாரத்தில் பா.ம.க. வீண் வதந்தியை பரப்புகிறது என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டி உள்ளார்.

மக்களை தூண்டி போராட்டம்

கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வடலூரில் நடைபெற்றது. கூட்டத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிறுவனம் 60 ஆயிரம் ஏக்கர் நிலம் எடுக்க போகிறது என்று பா.ம.க.வினர் கூறுகின்றனர். தற்போது நாடாளுமன்ற கூட்டம் நடந்து வருகிறது. ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கின்ற அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்றத்தில் என்.எல்.சி. நில எடுப்பு பிரச்சினைகள் குறித்து பேச வேண்டியது தானே. அதை விட்டுவிட்டு அப்பாவி விவசாய மக்களை தூண்டிவிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்.

வீண் வதந்தி

இதனுடைய பின்னணி என்னவென்று ஆராய்ந்து பார்த்தால் நாடாளுமன்ற தேர்தலில் கடலூர், சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற மக்களின் ஓட்டுக்காக வீண் வதந்தியை பரப்பி வருகின்றனர். மேலும் சிதம்பரம் தொகுதியை கைப்பற்றுவதற்காக சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட கீரப்பாளையம், புவனகிரி, பாளையங்கோட்டை, சேத்தியாத்தோப்பு, சோழத்தரம் ஆகிய பகுதிகளில் உள்ள விளை நிலங்களையும், வீராணம் ஏரியையும் என்.எல்.சி. நிர்வாகம் கையகப்படுத்த போகிறது என மக்களிடம் தவறான தகவலை தெரிவித்து வருகின்றனர். தற்போது ஆட்சியில் நாங்கள் தான் இருக்கிறோம். ஆனால் எங்களுக்கு தெரியாத தகவல்கள் எல்லாம் அவர்களுக்கு எப்படி தெரிகிறது என புரியவில்லை. எனவே இது வீண் வதந்தி, ஓட்டுக்காக தான் இது போன்ற செயல்களில் பா.ம.க.வினர் ஈடுபட்டு வருகின்றனர் என்று தி.மு.க. உறுப்பினர்கள் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story