அ.தி.மு.க.வுடன் உடன்பாடு எட்டப்படவில்லை; பேச்சுவார்த்தை தொடர்கிறது - மன்சூர் அலிகான்


அ.தி.மு.க.வுடன் உடன்பாடு எட்டப்படவில்லை; பேச்சுவார்த்தை தொடர்கிறது - மன்சூர் அலிகான்
x

நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து விரைவில் அறிவிப்போம் என்று மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் மன்சூர் அலிகான் கூட்டணி குறித்து அ.தி.மு.க.விடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அ.தி.மு.க. கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் என மன்சூர் அலிகான் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில், அ.தி.மு.க.வுடனான சந்திப்பு குறித்து இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக இன்று காலை தலைவர் மன்சூர் அலிகான் தலைமையில் பொதுச்செயலாளர் கண்ணதாசன், பொருளாளர் சபீர் அகமது, தலைமை நிலையச் செயலாளர் சீலன் பிரபாகரன் துணைப் பொதுச்செயலாளர் வல்லரசு உள்ளிட்டோர் அடங்கிய குழுவுடன் சென்று அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையிலான குழுவுடன் அழைப்பின் பேரில் பேச்சுவார்த்தை நடத்தினோம். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தொடர்கிறது.

அ.தி.மு.க. தவிர்த்து வேறொரு பெரிய கட்சியும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நாங்கள் ஒரு தொகுதியில் போட்டியிட உறுதியாக கேட்டு வருகிறோம். நாடாளுமன்றத்தில் எளியவர்களின் குரலாக தமிழ்நாட்டின் உரிமைகளை பெற்றுத் தருவதில் உறுதியாக இருக்கிறோம். எனவே இந்திய ஜனநாயகப் புலிகள் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story