எண்ணூரில் வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை; 3 பேர் கைது
எண்ணூரில் வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை எண்ணூர் தாழங்குப்பம் அம்மா உணவகம் அருகே கடந்த 29-ந்தேதி 42 வயது மதிக்கத்தக்க வடமாநில தொழிலாளி ஒருவர் இறந்து கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் ரத்த காயம் காணப்பட்டது. எண்ணூர் போலீசார், தொழிலாளியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
எண்ணூர் உதவி கமிஷனர் பிரம்மானந்தம் தலைமையிலான தனிப்படை போலீசார், சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். 3 பேர் மோட்டார்சைக்கிளில் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
மோட்டார்சைக்கிள் பதிவு எண்ணை வைத்து எண்ணூர் தாழங்குப்பத்தைச் சேர்ந்த ஞானசேகர் (வயது 27), அபிஷேக் (20), முகேஷ் (24) ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் குடிபோதையில் இருந்த 3 பேரும் வடமாநில தொழிலாளியை சரமாரியாக தாக்கியதும், இதில் அவர் உயிரிழந்துவிட்டதும் தெரியவந்தது.
இந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.