கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகள் எண்ணிக்கை பெரம்பலூரில் அதிகம்-கலெக்டர் கற்பகம் தகவல்
தமிழகத்திலேயே பெரம்பலூர் மாவட்டத்தில் தான் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகள் எண்ணிக்கை அதிகம் என மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்தார்.
கலெக்டர்கள் மாநாடு
சென்னையில் சமீபத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட கலெக்டர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகமும் கலந்து கொண்டார். அவரிடம் மாநாட்டில் முதல்-அமைச்சர் தெரிவித்த கருத்துகள் குறித்து 'தினத்தந்தி' நாளிதழ் சார்பில் பேட்டி எடுக்கப்பட்டது. அப்போது கலெக்டர் கற்பகத்திடம் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டில் தமிழக முதல்-அமைச்சர் கூறியது என்ன?
பதில்:- மாவட்டத்தில் நிலவும் அமைதியை கெடுக்க நினைப்பவர்களை முழுமையாக தடுக்க வேண்டும். சாராயம், போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும். இதில் ஈடுபடுபவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகள், பெண்களுக்கு ஏற்படும் குற்றங்களில் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்கு உடனடி தண்டனை பெற்று கொடுக்க வேண்டும்.
பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் புகார் தெரிவிக்க வாட்ஸ்-அப் எண், தொலைபேசி எண்ணை அறிவிக்க வேண்டும். சமூக ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவோர் மீதும், சமூக ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிப்போர் மீது சட்டப்படி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.
காலை சிற்றுண்டி
கேள்வி:- முதல்-அமைச்சர் முக்கியமாக எதுவும் கூறினாரா?
பதில்:- 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்ற மேற்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வரும் புதுமை பெண் திட்டத்தையும், தற்போது அனைத்து அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வரை பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டுவரும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தையும், தற்போது அமல்படுத்தப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தையும் கண்காணிக்க வேண்டும். அந்த வரலாற்று சாதனைமிக்க திட்டங்களை கண்காணித்து நல்ல முறையாக தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். இந்த திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாகவே அரசின் திட்டங்களை கடைகோடி மக்களையும் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்
கேள்வி:- மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்பட்டு வருகிறது?
பதில்:- ஏற்கனவே அரசு டவுன் பஸ்களில் மகளிர் கட்டணமில்லா பயணம் செய்யும் திட்டம், பெண்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அதுபோல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டமும் குடும்ப தலைவிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் நன்றாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் உள்ள சந்தேகங்களை தீர்க்க உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே பெரம்பலூர் மாவட்டத்தில் தான் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகள் எண்ணிக்கை அதிகம். அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் விண்ணப்பித்த 1 லட்சத்து 90 ஆயிரம் பெண்களில் இதுவரை 1 லட்சத்து 5 ஆயிரம் பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 10 ஆயிரம் பெண்களுக்கு இந்த தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கேள்வி:- முதல்-அமைச்சர் எந்த பணிகளுக்கு தற்போது முன்னுரிமை கொடுக்க அறிவுறுத்தியுள்ளார்?
பதில்:- தற்போது மாவட்டத்தில் அரசு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் விடுதிகளில் கட்டிட பராமரிப்பு பணிகள் ஏதும் மேற்கொள்ள வேண்டும் என்றால், அதற்கு அறிக்கையை தயார் செய்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முன்னுரிமை கொடுத்துள்ளார்.
மீண்டும் மஞ்சப்பை திட்டம்
கேள்வி:- குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மாவட்டத்தில் எப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது?
பதில்:- மாவட்டத்தில் குழந்தைகள், பெண்களுக்கு ஏற்படும் குற்றங்களுக்கு மாவட்ட நிர்வாகம், போலீசாரும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள், பெண்களுக்கு ஏற்படும் குற்றங்கள் தொடர்பாகவும், குழந்தை திருமணம் நடந்தாலும், கல்வி உதவிக்காகவும் எனது செல்போன் எண்ணான 9444175000-ஐ தொடர்பு கொள்ளலாம். அல்லது வாட்ஸ்-அப் மூலம் தகவல் தெரிவிக்கலாம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி:- மாவட்டத்தில் பிளாஸ்டிக் (நெகிழி) ஒழிப்பு, மீண்டும் மஞ்சப்பை திட்டத்திற்கு என்ன நடவடிக்கை எடுக்க உள்ளீர்கள்?
பதில்:- பிளாஸ்டிக் ஒழிக்க மாவட்டத்தில் விரைவில் முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தின் படி மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மஞ்சப்பை கிடைக்க எந்திரம் வைக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக கலெக்டர் அலுவலகத்தில் அந்த எந்திரம் வைக்கப்படவுள்ளது.
வன விலங்குகள் தொந்தரவு
கேள்வி:- மாவட்டத்தில் வன விலங்குகளை பாதுகாக்க, நீர் நிலைகளில் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
பதில்:- வனத்துறை மூலம் வன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. வன விலங்குகளுக்கு வனப்பகுதியில் அதற்கான உணவு போதியளவு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோடை காலங்களில் வனப்பகுதியில் தண்ணீர் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வன விலங்குகளின் தொந்தரவால் பயிர்கள் பாதிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தால், அவர்கள் ஆய்வு செய்து நிவாரணம் பெற்று தருவார்கள். நீரின்றி அமையாது உலகு என்பதற்கு இணங்க மாவட்டத்தில் நீர் நிலைகளான ஏரி, குளங்கள் ஒவ்வொன்றாக சீரமைக்கப்பட்டு வருகிறது. புதிதாக நீர் நிலைகள் மாவட்டத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. நீர் நிலைகள், அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. இனி ஆக்கிரமிப்பு செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி:- மரங்களை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
பதில்:- பெரம்பலூர் மாவட்டத்தில் பசுமை பரப்பினை அதிகரிக்கும் பொருட்டு 2023-24-ம் ஆண்டிற்கு சுமார் 9½ லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்ட நிர்வாகம் வனத்துறை மூலம் மரக்கன்றுகள் நடும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதில் சங்க கால மரங்களும் நடப்பட்டு வருகிறது. வனத்துறையின் மூலம் மரகத பூஞ்சோலை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. பெயருக்கு மரக்கன்றுகளை நட்டால் மட்டும் போதாது என்பது இல்லாமல், அதனை முறையாக பராமரித்து மரங்களாக வளர செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.