கடைசி ஆயுதம் ...! பொதுக்குழுவை புறக்கணியுங்கள்...! உறுப்பினர்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம்


கடைசி ஆயுதம் ...! பொதுக்குழுவை புறக்கணியுங்கள்...! உறுப்பினர்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம்
x
தினத்தந்தி 22 Jun 2022 8:13 AM GMT (Updated: 23 Jun 2022 4:26 AM GMT)

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 12ல் இருந்து 7 ஆக குறைந்து உள்ளது.

சென்னை:

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் புயலை கிளப்பி இருக்கிறது. ஒற்றை தலைமை விவகாரத்தில் கடும் அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தொடர்ந்து தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அவரை சமாதானப்படுத்த அக்கட்சி முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்திருக்கிறது.

இந்தநிலையில் திட்டமிட்டபடி அ.தி.மு.க. பொதுக்குழு 23-ந்தேதி (நாளை) நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உறுதியாக கூறிவருகிறார்கள். அதேவேளை சென்னையை அடுத்த வானகரத்தில் பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி வருகிறது. பொதுக்குழுவை புறக்கணிக்க முடிவு இதனால் ஓ.பன்னீர்செல்வம் கடும் அதிருப்தியில் இருக்கிறார்.

இதனால் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை புறக்கணிக்கவும் அவர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதையொட்டி சட்ட வல்லுனர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த சூழலில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது . 12ல் இருந்துநேற்று 9 ஆக குரைந்தது. இன்று 7 ஆக குரைந்து உள்ளது.அ.தி.மு.கவில் நிர்வாகரீதியான 75 மாவட்டங்களில் பெரும்பான்மை, அதாவது 68 மாவட்டச் செயலாளர்கள் தங்கள் ஆதரவை எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவித்துள்ளனர். 2 நாட்களில் பன்னீர் செல்வத்திடம் இருந்த 5 மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவியுள்ளனர்.

பன்னீர் செல்வத்திற்கு மாவட்ட செயலாளர்கள் தேனி சையதுகான், வேளச்சேரி அசோக், குமரி அசோகன், திருச்சி வெல்லமண்டி நடராஜன், வைத்திலிங்கம், தஞ்சை சுப்ரமணி மட்டுமே ஆதரவாக உள்ளனர்.இதுதவிர, மொத்தம் உள்ள 2,500 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,300-க்கும் மேற்பட்டோர் எடப்பாடிக்கு ஆதரவாக, பொதுக்குழுவை குறிப்பிட்ட தேதியில் நடத்தி முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் அனுப்பியுள்ளனர்.

தற்போது வேளச்சேரி மாவட்ட செயலாளர் அசோக் இன்று எடப்பாடியை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். அதுபோல் முன்னாள் மாநிலங்கலவை எம்.பி. மைத்ரேயன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதேபோல் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாள்களாக பல்வேறு மாவட்ட நிர்வாகிகள், கட்சியின் முன்னணி தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இன்று கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் உள்ள அவரது வீட்டில் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களை சந்தித்து வருகிறார்.

இந்த நிலையில்பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாளை நிச்சயம் பொதுக்குழு நடக்கும். அனைவரும் கலந்துகொள்வார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தவறான பாதையில் சென்றுகொண்டிருக்கிறார் என்று நேரடியாக சுட்டிக்காட்டினார்.

பொதுக்குழுவுக்கு வாருங்கள் என ஓ.பன்னீர்செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். ஒருங்கிணைப்பாளர்கள் என்ற முறையில் இருவரும் இணைந்து பொதுக்குழுவில் பங்கேற்போம் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டு உள்ளார்.

நாளை பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வம் இன்று தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தேனி சையது கான், கன்னியாகுமரி அசோகன் வெல்லமண்டி நடராஜன், வைத்தியலிங்கம், குன்னம் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் மனோஜ் பாண்டியன், தர்மர் எம்.பி. ஆகியோரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

அதே நேரம் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் ஆதரவாளர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. இந்தநிலையில் கடைசி அஸ்திரமாக நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 மணியளவில் அவர் வர உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஜெயலலிதா நினைவிடத்தில் திரண்டுள்ள ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக கோஷமிட்டு வருகின்றனர்.


Next Story