கும்மிடிப்பூண்டி அருகே மூதாட்டி கொலை வழக்கில் முதியவர் கைது


கும்மிடிப்பூண்டி அருகே மூதாட்டி கொலை வழக்கில் முதியவர் கைது
x

கும்மிடிப்பூண்டி அருகே மூதாட்டி கொலை வழக்கில் முதியவர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர்

கொலை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கொண்டமாநல்லூர் கிராமத்தில் உள்ள மேட்டுகாலனியை சேர்ந்தவர் சுலோசனா (வயது 62). இவரது கணவர் வீராசாமி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில் ஒரு மகனும், 3 மகள்களும் உள்ளனர். சுலோச்சனா மட்டும் கொண்டமாநல்லூரில் உள்ள குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

கடந்த 20-ந் தேதி வீட்டின் உள்ளே கயிற்று கட்டிலில் ரத்த வெள்ளத்தில் சுலோச்சனா பிணமாக கிடந்தார். அவரது கழுத்து மற்றும் முகத்தில் கத்தியால் வெட்டப்பட்ட காயம் காணப்பட்டது.

தகவலறிந்து அங்கு சென்ற பாதிரிவேடு போலீசார் சுலோச்சனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், பணம், நகைக்காக இந்த கொலை நடைபெறவில்லை என்பதும், சுலோச்சனாவின் வீட்டிற்கு வந்து சென்ற நன்கு அறிமுகமான நபர்களால்தான் இந்த படுகொலை நடந்திருக்கிறது எனவும் தெரியவந்தது.

கைது

இது குறித்து இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், இந்த படுகொலை வழக்கு தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் நடத்திய தொடர் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. சுலோச்சனாவின் கணவர் இறந்த பிறகு அருகே உள்ள ஏடூரை சேர்ந்த வீரராகவன் என்கிற வீரய்யா (70) என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சுலோச்சனாவிடம் நெருங்கி பழகி வந்து உள்ளார். நாளடையில் வீரராகவனை சுலோச்சனா வெறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வீரராகவன், சம்பவத்தன்று இரவு சுலோக்சனாவின் வீட்டுக்கு சென்று அவரை கத்தியால் குத்திக் கொலை செய்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து இந்த கொலை வழக்கில் வீரராகவனை நேற்று இரவு பாதிரிவேடு போலீசார் கைது செய்தனர்.


Next Story