வியாசர்பாடியில் மாநகராட்சி லாரி சக்கரத்தில் சிக்கி முதியவர் பலி
வியாசர்பாடியில் மாநகராட்சி லாரி சக்கரத்தில் சிக்கி முதியவர் பலியானார்.
வியாசர்பாடி மகாகவி பாரதியார் நகர் 10-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் அய்யாதுரை (வயது 74). இவர் நேற்று முன்தினம் இரவு வியாசர்பாடி மெக்சின் புரம் பகுதியில் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த சென்னை மாநகராட்சிக்குட்பட்ட குப்பை லாரி கட்டுப்பாட்டை இழந்து முதியவர் அய்யாதுரை மீது மோதியதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். பின்னர் அவர் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஆத்திரத்தில் குப்பை லாரியை வழிமறித்து கண்ணாடியை அடித்து நொறுக்கினர். உடனே லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.