வேளாண்துறை சார்பில் 4.42 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.481 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கினார் முதல்-அமைச்சர்


வேளாண்துறை சார்பில் 4.42 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.481 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கினார் முதல்-அமைச்சர்
x
தினத்தந்தி 11 Oct 2022 10:57 AM GMT (Updated: 11 Oct 2022 10:58 AM GMT)

2021-2022 -ம் ஆண்டில் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட சிறப்புப் பருவ பயிர்களுக்காக விவசாயிகளுக்கு இழப்பீட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை:

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

விவசாயிகளின் வருவாயை பன்மடங்காக உயர்த்திட தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் பயனாக 20 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு 2021-22-ம் ஆண்டில், தமிழ்நாட்டில் 122 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

2021-2022-ம் ஆண்டில் பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் 37 மாவட்டங்கள் 14 தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு, இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம், இப்கோ–டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டது.

2021-2022-ம் ஆண்டில், இத்திட்டத்தின் கீழ் சுமார் 40.74 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை காப்பீடு செய்வதற்காக, 26.06 லட்சம் விவசாயிகள் பதிவு செய்தனர். குறுவை (காரீப்) பருவத்திற்கான இழப்பீட்டுத் தொகையாக 18 கோடி ரூபாய் 21 ஆயிரத்து 125 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

2021-2022-ம் ஆண்டு சிறப்பு பருவ (சம்பா நெல் மற்றும் பருத்தி, மக்காச்சோளம், வெங்காயம் உள்ளிட்ட) பயிர்களுக்கு தமிழ்நாடு அரசின் காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ.1,338.89 கோடி காப்பீட்டு நிறுவனங்களுக்கு உரிய காலத்தில் வழங்கப்பட்டது.

இதன் விளைவாக, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை விரைவில் வழங்க தமிழ்நாடு அரசு சிறப்பு நடவடிக்கை எடுத்து, 2021-2022-ம் ஆண்டு சம்பா நெற்பயிர் உள்பட சிறப்புப் பருவ பயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக, மொத்தம் ரூ.481 கோடி, 4 லட்சத்து 42 ஆயிரத்து 734 விவசாயிகளுக்கு ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த இழப்பீட்டுத் தொகை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்து, அதன் அடையாளமாக 10 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகைக்கான காசோலைகளை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இயற்கை பேரிடரினால் அடிக்கடி பயிர்கள் பாதிக்கப்படும் நிலையை கருத்தில் கொண்டு நடப்பு 2022-23-ம் ஆண்டிலும் ரூ.2,057 கோடி நிதியை தமிழ்நாடு அரசின் காப்பீட்டுக் கட்டண மானியமாக நிதி ஒப்பளிக்கப்பட்டு இதுவரை 63 ஆயிரத்து 331 ஏக்கர் பரப்பளவு 85 ஆயிரத்து 597 விவசாயிகளால் பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனுக்காக அரசு செயல்படுத்தி வரும் இத்திட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் பதிவு செய்து பலனடைய வேண்டும்.

இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர் சி.சமயமூர்த்தி, வேளாண்மை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, இப்கோ–டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் சிவராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story