மளிகைக்கடை ஊழியரிடம் ரூ.37½ லட்சம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது


மளிகைக்கடை ஊழியரிடம் ரூ.37½ லட்சம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 29 Sep 2023 7:11 PM GMT (Updated: 29 Sep 2023 7:12 PM GMT)

மளிகைக்கடை ஊழியரிடம் ரூ.37½ லட்சம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

ரூ.37½ லட்சம் பறிப்பு

திருச்சி மன்னார்புரம் பகுதியை சேர்ந்தவர் ராஜகிருஷ்ணகுமார் (வயது 56). இவர் காந்திமார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு மளிகைக்கடையில் இருந்து சில்லறை வியாபாரத்துக்காக சரக்குகளை மற்ற கடைகளுக்கு ஏற்றி அனுப்பும் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக கடையில் வசூலாகும் பணத்தை வங்கியில் செலுத்தி வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 12-ந் தேதி ராஜகிருஷ்ணகுமார் வசூல் தொகை ரூ.37½ லட்சத்தை ஒரு பையில் வைத்துக்கொண்டு, கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள வங்கியில் செலுத்துவதற்காக ஆட்டோவில் சென்றார்.

ஷாஜகான் என்பவர் ஆட்டோவை ஓட்டிச் சென்றார். மேலப்புதூரில் இருந்து வந்து தலைமை தபால் நிலைய சிக்னலில் ஆட்டோ நின்றபோது, அங்கு வந்த ஒரு நபர் அரிவாளை காட்டி மிரட்டி பணப்பையை பறிக்க முயன்றார். உடனே ஆட்டோ டிரைவர் ஷாஜகான் அதை தடுக்க முற்பட்டபோது, அவரது கையிலும், முதுகிலும் அந்த வாலிபர் அரிவாளால் வெட்டினார். பின்னர் பணத்தை பறித்துக்கொண்டு, அங்கு ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் நின்ற மற்றொரு வாலிபருடன் சேர்ந்து தப்பிச்சென்றார்.

போலீஸ் நிலையம் முற்றுகை

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜகிருஷ்ணகுமார் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் முத்தரசநல்லூரை சேர்ந்த இளையராஜா மனைவி சூர்யா, வரகனேரியை சேர்ந்த அன்சாரி, காந்திமார்க்கெட் ஜெயில்பேட்டையை சேர்ந்த வினோத்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் திருச்சி காட்டூரை சேர்ந்த ஜாகிர்உசேன் என்பவர் கடந்த 19-ந் தேதி சென்னை ஐகோர்ட்டில் சரண் அடைந்தார். இதையடுத்து சூர்யாவை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களையும் கைது செய்யக்கோரியும் காந்திமார்க்கெட் வியாபாரிகள் கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

மேலும் ஒருவர் கைது

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்டவர் வரகனேரியை சேர்ந்த மிட்டாய்பாபு (29) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் மிட்டாய்பாபு மதுரைக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு திருச்சி-மதுரை பைபாஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதில் அவருடைய கால் முறிந்தது.

இந்த விபத்தை கண்ட அந்த பகுதியினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இது குறித்து தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார் மிட்டாய்பாபுவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மிட்டாய்பாபு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காந்திமார்க்கெட் பகுதியில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story