சினிமா தயாரிப்பாளர் கொடூர கொலை வழக்கில் ஒருவர் கைது
சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர் பாஸ்கரன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பூந்தமல்லி,
சென்னை விருகம்பாக்கம், சின்மயா நகரில் கூவம் ஆற்றை ஒட்டிய பகுதியில் கருப்பு நிற பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் ஆண் பிணம் கிடந்தது. நேற்று காலை அந்த பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள், இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த விருகம்பாக்கம் போலீசார், பிளாஸ்டிக் பையை பிரித்து பார்த்தனர். அதில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் துணிைய வைத்து அடைத்த நிலையில் பிணமாக கிடந்தார். அவரது முகம் உள்பட உடலின் பல இடங்களில் பலத்த காயங்கள் காணப்பட்டது. மர்மநபர்கள் அவரை கொடூரமாக கொலை செய்து, உடலை அங்கு வீசி இருப்பது தெரிந்தது.
அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரித்தனர்.
சினிமா தயாரிப்பாளர்
அப்போது சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தில் ஒருவர் தனது தந்தையை காணவில்லை என போலீசில் புகார் செய்து இருப்பது தெரிந்தது. விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர், ஆதம்பாக்கத்தை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் பாஸ்கரன் (வயது 65) என்பது தெரியவந்தது. அவரது உடலை பார்த்து, அது பாஸ்கரன்தான் என அவரது உறவினர்களும் உறுதி செய்தனர். இது குறித்து விருகம்பாக்கம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
கொலையான பாஸ்கரன், கட்டுமான தொழில் செய்து வந்தார். மேலும் சினிமாவுக்கு பைனான்சும் செய்து வந்தார். அதன்பிறகு நடிகர் ராம்கி நடித்த 'சாம்ராட்' மற்றும் 'ஒயிட்' ஆகிய 2 படங்களை தயாரித்தார். அதன்பிறகு சினிமா துறையை விட்டு விலகி விட்டதாக தெரிகிறது. இவருக்கு பாக்கியம்மாள் (60) என்ற மனைவியும், கார்த்திகேயன் (40), கவுசிக் (36) என 2 மகன்களும் உள்ளனர்.
'சுவிட்ச் ஆப்'
வழக்கம்போல நேற்று முன்தினம் காைல வீட்டில் இருந்து காரில் வெளியே புறப்பட்டு சென்ற பாஸ்கரன், இரவு தனது மகனை செல்போனில் தொடர்பு கொண்டு, "நான், விருகம்பாக்கத்தில் இருக்கிறேன். சென்னையில் நடைபெறும் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வருகிறேன்" என கூறியுள்ளார்.
ஆனால் அதன்பிறகு அவரது செல்போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மகன், பல இடங்களில் தேடியும் தந்தையை காணாததால் ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆன்லைன் மூலம் புகார் செய்தார். மேலும் அவரும், உறவினர்களும் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தனர். இதற்கிடையில் நேற்று காலை அவர் விருகம்பாக்கத்தில் பிணமாக மீட்கப்பட்டது தெரியவந்தது.
பாஸ்கரன் சென்ற கார், அவர் பிணமாக கிடந்த இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டது. அந்த குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்த கணேசன் என்பவர், தனது வீட்டை பூட்டிவிட்டு அவசர அவசரமாக வெளியேறியதும் தெரிந்தது.
காரில் கடத்தல்
எனவே மர்மநபர்கள், பாஸ்கரனை காரில் கடத்திச்சென்று அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் அடைத்து வைத்து உள்ளனர். பின்னர் அவரது வாயில் துணியை வைத்து அடைத்தும், கை, கால்களை கட்டிப்போட்டும் சரமாரியாக அடித்து கொடூரமாக கொலை செய்து உள்ளனர்.
பின்னர் அவரது உடலை மறைப்பதற்காக கருப்பு நிற பிளாஸ்டிக் பையில் சுற்றி அதனை கூவம் ஆற்றின் கரையோரம் வீசிவிட்டு சென்றதும் தெரியவந்தது. அத்துடன் அவரது ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி லட்சக்கணக்கில் பணம் எடுக்கப்பட்டு இருப்பதும் தெரிந்தது.
3 தனிப்படைகள்
பாஸ்கரன் கடைசியாக யாரிடம் பேசினார்? என அவரது செல்போன் அழைப்புகளை வைத்து போலீசார் விசாரித்து வந்தனர். கொலையாளிகள் உருவம் பதிவாகி உள்ளதா? என அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆராய்ந்து வந்தனர். மேலும் இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.
கைது
இந்நிலையில் சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர் பாஸ்கரன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கத்தை சேர்ந்த கணேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாஸ்கரன் கொலைக்கான காரணம் என்ன? முன்விரோதம் காரணமாக அவர் கடத்தி கொலை செய்யப்பட்டாரா? அல்லது பணம், கொடுக்கல் வாங்கல் தகராறா? என பல்வேறு கோணங்களில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.