சேலம் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை உயர்வு


சேலம் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை உயர்வு
x
தினத்தந்தி 10 July 2023 7:30 PM GMT (Updated: 11 July 2023 10:28 AM GMT)

நோய் தாக்கம் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டதால் சேலம் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை உயர்ந்தது

சேலம்

நோய் தாக்கம் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டதால் சேலம் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை உயர்ந்து ஒரு கிலோ நேற்று ரூ.115-க்கு விற்பனையானது.

சின்ன வெங்காயம்

சேலம் மாவட்டம் தலைவாசல், ஆத்தூர், அயோத்தியாப்பட்டணம், காடையாம்பட்டி, வீரபாண்டி ஆகிய பகுதிகளில் அதிக அளவு சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து தினமும் ஏராளமான விவசாயிகள் சின்ன வெங்காயத்தை உழவர் சந்தைகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.

அதே போன்று நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் சின்ன வெங்காயம் சேலம் உழவர் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயம் விலை அதிகரித்து உள்ளது. அதன்படி நேற்று முன்தினம் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.110-க்கு விற்கப்பட்டது.

விலை குறைய வாய்ப்பு

இந்த நிலையில் நேற்று விலை மேலும் உயர்ந்து ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.115-க்கு விற்பனை ஆனது. இது குறித்து வியாபாரி மற்றும் விவசாயிகளிடம் கேட்ட போது சின்னவெங்காயம் பயிரிடப்பட்ட போது சருகு நோய் தாக்கியதால் விளைச்சல் பாதிக்கப்பட்டது. மேலும் பருவமாற்றத்தின் காரணமாகவும் விளைச்சல் குறைந்தது.

இதனால் மார்க்கெட்டில் சின்னவெங்காயம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலை இன்னும் சிறிது காலம் நீடிக்கும். தற்போது பயிரிடப்பட்டு உள்ள சின்ன வெங்காயம் அதிகம் விளைச்சல் தரும் போது விலை குறைய வாய்ப்பு உள்ளது என்று கூறினர்.


Next Story