ஆன்லைன் சூதாட்டம்: பணத்தை இழந்த வாலிபர் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை - உருக்கமான ஆடியோ வைரல்


ஆன்லைன் சூதாட்டம்: பணத்தை இழந்த வாலிபர் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை - உருக்கமான ஆடியோ வைரல்
x
தினத்தந்தி 5 April 2024 9:45 PM GMT (Updated: 5 April 2024 9:45 PM GMT)

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் ரெயில்முன் பாய்ந்து தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

உளுந்தூர்பேட்டை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வண்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 29). சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் சுமார் ரூ.15 லட்சத்துக்கு மேல் பணத்தை இழந்ததாக தெரிகிறது.

இதனால் அவருக்கு கடன் பிரச்சினை ஏற்பட்டது. கடன் கொடுத்தவர்கள் தங்களது பணத்தை திருப்பி தருமாறு ஜெயராமனிடம் தொடர்ந்து வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஜெயராமன் மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சக ஊழியர்களிடம் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்னையில் இருந்து ஜெயராமன் புறப்பட்டு சென்றார். ஆனால் அவர் வீட்டுக்கு செல்லவில்லை. இதையறிந்த ஜெயராமனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் மாயமான ஜெயராமனை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெயராமன் தனது வீட்டின் அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.

இதுகுறித்த தகவலின்பேரில் விருத்தாசலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி வந்த வந்தே பாரத் ரெயில் முன் பாய்ந்து ஜெயராமன் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

இதையடுத்து ஜெயராமன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், ஜெயராமன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தனது பெற்றோர் மற்றும் நண்பர்களின் செல்போனுக்கு ஆடியோ மூலம் குறுந்தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் "நான் செய்த முட்டாள் தனத்தால் தப்பான வாழ்க்கை வாழ்ந்துவிட்டேன். அதனால் நான் சாக போகிறேன். இது என்னோட முடிவுதான். நீங்கள் யாரும் என்னை எதுவும் செய்யவில்லை. நான் தவறு செய்துவிட்டேன்.

இப்போது கூட ரூ.2 லட்சம் வாங்கி தோற்றுபோய்விட்டேன். அதில் இருந்து என்னால் வெளியே வரமுடியவில்லை. இதற்கு யாரும் காரணம் இல்லை. என்னை யாரும் தேட வேண்டாம். எல்.ஐ.சி. பாலிசி பணத்தை பெற்று கடனை அடைத்துவிடுங்கள்" என்று கூறியிருந்தார். இந்த ஆடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Next Story