பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு; சிறப்பு கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்கள்


பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு; சிறப்பு கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்கள்
x

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சிறப்பு கிராம சபை கூட்டத்தை கிராம மக்கள் புறக்கணித்தனர்.

செங்கல்பட்டு

காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்று வட்டார 13 கிராமப்புறங்களை உள்ளடக்கி 4,791 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கப்படுவதால் குடியிருப்புகள் விளை நிலங்கள், நீர்நிலைகள் பாதிக்கப்படும் என்று கூறி கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

உண்ணாவிரத போராட்டம், கருப்புக்கொடி போராட்டம், சாலை மறியல், தலைமை செயலகத்தை நோக்கி பேரணி, என பல்வேறு விதமான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் 453- வது நாளாக இரவு நேரங்களில் ஒன்று கூடி மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து கோஷங்களை எழுப்பி நாள்தோறும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் விமான நிலையம் அமைப்பது குறித்து அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஒருமனதாக தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளனர்.

இருப்பினும் கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மத்திய, மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.அதன் காரணமாக கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி சுதந்திர தின விழா மற்றும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி போன்ற நாட்களில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களை கிராம மக்கள் முழுமையாக புறக்கணித்து விமான நிலையம் அமைப்பதற்கான தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இரு முறை கிராமசபை கூட்டம் நடைபெறாத காரணத்தால் நேற்று ஏகனாபுரம் கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

ஊராட்சி மன்ற தலைவர் சுமதி சரவணன் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அரசு அதிகாரிகளும், வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்ட நிலையில் ஏகனாபுரம் கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் யாரும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஒருமனதாக புறக்கணித்தனர்.

ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர், அரசு அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்ட கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ளாததால் வேறு தேதிக்கு கிராமசபை கூட்டம் நடத்தப்படும் என்று ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவித்துவிட்டு சென்றார்.

பின்னர் நிருபர்களை சந்தித்த போராட்ட குழு செயலாளர் சுப்பிரமணியன், பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்துள்ள கிராம மக்களிடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மேலும் விமான நிலையம் அமைக்கப்படாது என்ற அறிவிப்பு வரும் வரை கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தார்.


Next Story