கொசஸ்தலை ஆற்றில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு; எண்ணூரில் 8 கிராம மக்கள் போராட்டம் - கடைகள் அடைப்பு


கொசஸ்தலை ஆற்றில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு; எண்ணூரில் 8 கிராம மக்கள் போராட்டம் - கடைகள் அடைப்பு
x

கொசஸ்தலை ஆற்றில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து எண்ணூரில் 8 மீனவ கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக வியாபாரிகள் கடைகளை அடைத்தனர்.

சென்னை

சென்னை எண்ணூரை சுற்றி நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், எண்ணூர் குப்பம், முகத்துவாரகுப்பம், சிவன்படைவீதி குப்பம், காட்டுக்குப்பம், சின்னகுப்பம், பெரியகுப்பம் ஆகிய 8 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர்.

ஆறும், கடலும் இணையும் எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் மீன், நண்டு, இறால் போன்ற கடல்வாழ் உயிரினங்களை பிடித்து விற்பனை செய்வதுதான் இப்பகுதியில் உள்ள 8 கிராம மீனவர்களின் வாழ்வாதாரம்.

எண்ணூரில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் நிலக்கரி கழிவு, சாம்பல் கழிவு, சுடுநீரால், முகத்துவாரம் பகுதியில் மீன்வளம் பாதிக்கும் அபாயம் உள்ளதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதற்கிடையில் வடசென்னை அனல் மின் நிலையத்தில் 3-வது நிலை விரிவாக்க பணிக்காக மின்வாரியம் சார்பாக கொசஸ்தலை ஆற்றில் உயர் மின்கோபுரம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக ஆற்றில் கட்டிட கழிவுகளை கொட்டி உள்ளனர்.

இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். படகில் சென்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் கொசஸ்தலை ஆற்றில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, எண்ணூரை சுற்றி உள்ள 8 மீனவ கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் நேற்று காலை தாழங்குப்பத்தில் இருந்து ஊர்வலமாக சென்று எண்ணூர் - கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பெண்களும் பங்கேற்றனர்.

அப்போது கையில் கவன ஈர்ப்பு கண்டன பதாகைகள் ஏந்தி, கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

மீனவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக எண்ணூர் வியாபாரிகள் சங்கம் சார்பில் அந்த பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. போராட்டம் காரணமாக எண்ணூர் தாழங்குப்பம் வழியாக இயக்கப்படும் மாநகர பஸ்கள் மதியம் வரை நிறுத்தி வைக்கப்பட்டன.

மேலும் இந்த 8 கிராம மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பழவேற்காடு முதல் திருவான்மியூர் வரை உள்ள 32 மீனவ கிராமங்களில் உள்ள முக்கிய நிர்வாகிகளும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்குன்றம் போலீஸ் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீஸ் உதவி கமிஷனர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.

போராட்டம் நடந்த இடத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் மின்கோபுரம் அமைக்கும் பணி நடைபெறும் இடம் சிறிது தூரத்திலேயே உள்ளது. எனவே மீனவ கிராம மக்கள் அந்த பகுதிக்கு செல்லாமல் தடுக்க சாலையின் குறுக்கே போலீசார் இரும்பு தடுப்புகள் அமைத்து பலத்த பாதுகாப்பு போட்டு இருந்தனர்.

மேலும் வஜ்ரா வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ்கள் அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.


Next Story