ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள், அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள், அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Aug 2023 12:15 AM IST (Updated: 2 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொடநாடு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மற்றும் அ.ம.மு.க.வினர் கள்ளக்குறிச்சியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி கொடியை பயன்படு்த்தியதாக அ.தி.மு.க.வினர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தன

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

ஆர்ப்பாட்டம்

கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க. அரசை வலியுறுத்தியும், நீதி கேட்டும் ஓ.பி.எஸ்.அணி மற்றும் அ.ம.மு.க.வினர் சார்பில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஓ.பி.எஸ். அணியின் மாவட்ட செயலாளர் வேங்கையன், அ.ம.மு.க. செயலாளர் கோபி மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஓ.பி.எஸ். அணியின் கர்நாடக மாநில நிர்வாகி புகழேந்தி கலந்துகொண்டு பேசினார்.

இதில் ஓ.பி.எஸ். அணி நகர செயலாளர் புண்ணியமூர்த்தி, ஒன்றிய செயலாளர் சாமிதுரை, அ.ம.மு.க. நகர செயலாளர் ஜெயபிரகாஷ், ஒன்றிய செயலாளர் மதுசூதனன், நகராட்சி கவுன்சிலர் பால்ராஜ், வக்கீல் பிரிவு செயலாளர் பழனிவேல் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அடிமை இல்லை

பின்னர் புகழேந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், கொடநாடு கொலை மற்றும் கொள்ளை குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி எதிர்க்கட்சியாக இருந்தபோது தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னரிடம் புகார் கொடுத்தார். அதேபோல் தேர்தல் நேரத்தில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடா்புடையவர்களை கண்டுபிடிப்போம் என்றார். எனவே தமிழக முதல்-அமைச்சர் இந்த வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். ஜெயலலிதா காட்டிய ஓ.பி.எஸ்.தலைமையில் கட்சி பணியை தொடா்ந்து செய்வோம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவோம். நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை என்றார்.

போலீஸ் நிலையத்தில் புகார்

இந்த நிலையில் அ.தி.மு.க. மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் சீனிவாசன் தலைமையில், நகர செயலாளர் பாபு, ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஞானவேல், துணை செயலாளர் வினோத்குமார் ஆகியோர் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர். அதில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ்.அணி மற்றும் டி.டி.வி. தினகரன் அணியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சிலர் பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க.வினரிடையே பிரிவினை மற்றும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் எங்களது கட்சியின் கொடி மற்றும் தோரணங்களை பயன்படுத்தி உள்ளனர். இது அ.தி.மு.க.வை அவமதிப்பதோடு, சட்டவிரோத செயலாகும். எனவே அ.தி.மு.க. கொடி, தோரணங்களை பயன்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


Next Story